Thursday, September 18, 2014

பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !

பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !
கு.ராமகிருஷ்ணம்
 பளிச்... பளிச்...
பலன் தரும் பாய் நாற்றங்கால்.
ஒரு நாத்துக்கு 30 தூர்.
பூச்சிகளை விரட்டும் பூண்டு, மிளகாய்க் கரைசல்.
''பாரம்பர்ய ரகமான சொர்ணமசூரி நெல் பத்தி 'பசுமை விகடன்'ல படிச்சதுமே ரொம்ப ஆர்வமான நான், உடனடியா விதைநெல்லை வாங்கி சாகுபடி செஞ்சேன். இன்னும் பத்து நாள்ல அறுவடை. பயிர் நல்லா செழிப்பா இருக்குறதால நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' மகிழ்ச்சிப் பொங்க பேசுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியைச் சேர்ந்த கண்ணன்.  
''50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றேன். முழுக்க முழுக்க ரசாயன முறையிலதான் நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். 'பசுமை விகடன்' படிக்க ஆரம்பிச்ச பிறகு... நம்மாழ்வாரும், சுபாஷ் பாலேக்கரும் சொல்ற இயற்கை இடுபொருட்களைத் தயார் செஞ்சு, பயன்படுத்தத் தொடங்கினேன்.
இந்த நாலு வருசமா 10 ஏக்கர்ல முழுமையா இயற்கை விவசாயமும், மீதி 40 ஏக்கர்ல 90% இயற்கை இடுபொருட்களும் வெறும் 10% ரசாயன உரமும் கலந்து விவசாயம் செய்றேன். ஆனா, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை முழுமையா தவிர்த்திட்டேன். அடுத்த வருஷத்துல இருந்து முழுக்கவும் இயற்கை விவசாயம்தான்.
கும்பகோணம் பக்கத்துல இருக்கற மருதாநல்லூரைச் சேர்ந்த எட்வின்கிட்டதான் சொர்ணமசூரி விதைநெல் வாங்கினேன். ரெண்டு கிலோ மட்டும் கிடைச்சதால, 30 சென்ட்ல மட்டும் ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சேன். இதோ, பயிரைப் பாருங்க சும்மா தளதளனு வளர்ந்து நிக்கறத...'' என்று உற்சாகத்தோடு சொன்னவர், சொர்ணமசூரியை 30 சென்ட் நிலத்தில் தான் சாகுபடி செய்த முறையை விவரித்தார் பாடமாக!
முளைத்த பின் விதை!
சொர்ணமசூரி ரகத்தை நாற்றங்காலில் விதைப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, அடுத்த 12 மணி நேரம் வைக்கோலும், சாக்கும் போட்டு மூடி வைக்க வேண்டும். வெப்பமும், ஈரமும் சேர்ந்து விதையைப் பழுக்கச் செய்து, முளைப்பு விடச் செய்துவிடும்.
3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட பாலித்தீன் விரிப்பை விரித்து, அதில் 4 அங்குலம் உயரத்துக்கு மண்ணையும், இரண்டு கிலோ மட்கிய தொழுவுரத்தையும் கலந்து போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து, பாய் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். முளைவிட்ட விதைகளை, இந்த நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். அடுத்த நாளில் இருந்து தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 100 கிராம் சாணம், 100 மில்லி மாட்டுச்சிறுநீர், 200 மில்லி தண்ணீர் கலந்து, மண்பானையில மூன்று நாள் மூடி வைத்து, 10-ம் நாளில் நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
100 நாளில் அறுவடை!
19-ம் நாளில் நாற்று தயாராகி விடும். சாகுபடி நிலத்தை மண்வெட்டியால் நன்றாகக் கொத்திவிட்டு, 30 கிலோ மட்கிய தொழுவுரம் போட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த நாள் முக்கால் அடி இடைவெளியில நாற்று நட வேண்டும். அதன் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக, நிலத்தில் உள்ள ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவிலிருந்து 10-ம் நாள்... 1 கிலோ சாணம், 1 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

15-ம் நாள் அரை லிட்டர் பஞ்சகவ்யாவை 5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் 50 மில்லி பூண்டு, மிளகாய்க் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் (பார்க்க, பெட்டி செய்தி). இதையெல்லாம் சரியாகச் செய்தால், சோர்வே இல்லாமல் வேகமா வளர்வதோடு... பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் இருக்காது. இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை. 100-ம் நாள் அறுவடை செய்யலாம்.
சாகுபடி பாடம் முடித்த கண்ணன், 'இந்தப் பயிருக்கு 90 நாள் வயசு ஆகுது. உயரம் 3 அடி இருக்கு. ஒரு நாத்துக்கு சராசரியா 30 தூர் வெடிச்சிருக்கு. இன்னும் 10 நாள்ல அறுவடை செய்யப் போறேன்.
இந்த 30 சென்ட்ல சராசரியா 6 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அடுத்த முறை அதிக பரப்புல இதை சாகுபடி செய்ய முடிவு செஞ்சிருக்கேன். புதுரகத்தையும், புதுப்புது நண்பர்களையும் எனக்கு அடையாளம் காட்டின பசுமை விகடனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை'' என்று நெக்குருகிச் சொல்லி விடை கொடுத்தார்!
படங்கள்:கே. குணசீலன்
தொடர்புக்கு, கண்ணன், அலைபேசி: 94432-22257
பூண்டு,மிளகாய்க் கரைசல் தயாரிப்பது எப்படி ?
பூண்டு, பச்சைமிளகாய் இரண்டையும் தலா ஒரு கிலோ எடுத்து, ஒன்றாக அரைத்து, அதில் 1 கிலோ புகையிலை, 5 லிட்டர் தண்ணீர் கலந்து, மண் பானையில் வைத்து, கொதிக்க விடவேண்டும். மூன்று நாள் மூடி வைத்து, பிறகு நன்றாக வடிகட்டி, கசடு நீக்கிய பிறகு, இந்தக் கரைசலைப் பயிருக்குப் பயன்படுத்தலாம்.

Wednesday, September 10, 2014

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!


இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 99524-93556.

Tuesday, September 02, 2014

ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி.

பசுமை பொக்கிஷம் :
நீங்கள் கேட்டவை : கேள்வி - பதில்
ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி... உயிர் வேலிக்கான கன்றுகள் எங்கு கிடைக்கும்?'' என்று குடவாசலிலிருந்து எம்.கார்த்திக் கேட்டிருக்கிறார். ஈரோடு-முத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன் பதில் தருகிறார்.
‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர். விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும் உண்டு.
எங்கள் மாவட்டத்தில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும் பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி வேலியை பார்க்கலாம்.
கிளுவையைப் பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும். ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத் தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.
கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.
கிளுவைக் குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால் யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும். உங்கள் பகுதியில்தான் இருக்கிறது பட்டுக்கோட்டை. அங்கேயும் முயற்சிக்கலாம். எங்கும் கிடைக்காத பட்சத்தில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.'' அலைபேசி 98947-55626.

ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...


மகசூல்
ஜி.பிரபு
 
ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...
கொட்டிக் கொடுக்குது குடைமிளகாய்!
சமவெளிப் பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் விவசாயம் பார்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலத்தை வைத்திருப்பவர்கள்... கால்கடுக்க, உடம்பு நோக சுற்றி வந்து விவசாயம் செய்தாலும் கடைசியில் கணக்கு பார்க்கும்போது, 'லாபமே இல்லை' என்று சொல்வதைத்தான் அதிகமாகப் பார்க்கமுடியும். அதிலும் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்பவர்களின் பாடு பிரச்னைகள் மிகுந்ததாகவே இருக்கிறது.
ஆனால், ''இனி யாரும் அப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. கால் ஏக்கர் நிலம் இருந்தாலே போதும், குடைமிளகாய் பயிரிட்டே மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வரைச் சம்பாதிக் கலாம்'' என்று உற்சாகத்தகவலை வெளியிடுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன். 
இவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பசுமைக்குடில். இந்த முறையில் சமவெளிப் பகுதிகளில் குடைமிளகாய் சாகுபடி பல இடங்களில் நடக்கிறது. என்றாலும், அதைக் காட்டிலும் மலைப் பிரதேச சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அதனாலேயே இதைக் கையில் எடுத்திருக்கிறேன் என்கிறார் ராஜாராமன்.
மதுரையைச் சேர்ந்த இவர், ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனால், ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதவர். சொல்லப்போனால், ஓய்வு பெற்றபிறகு அதிக அளவு சுறுசுறுப்பாகி, விவசாயத்தில் குதித்துவிட்டார். கணக்குப் போட்டுப்பார்த்தால்... கோட்-சூட் மாட்டிக் கொண்டு ரயில் நிலையத்தில் நின்றபோது கிடைத்த சம்பளத்தைவிட பல மடங்கு கூடுதலாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
''இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... அந்த வேலைக்கே போயிருக்கவேண்டியதில்லை....'' என்று வயிறு குலுங்கச் சிரித்துக்கொண்டே சொல்லும் ராஜாராமன், இதுவரை சிறுமலைப்பகுதி யில் யாருமே முயற்சி செய்து பார்த்திராத இந்த குடைமிளகாயை (கேப்ஸிகம்) பிரமாத மாக விளைவித்து லாபம் ஈட்டி வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் பாதையில் தனித்திட்டாக உயர்ந்து கிடக்கும் பகுதிதான் சிறுமலை. கொடைக்கானல் அளவுக்கு உயரம் கிடையாது என்றாலும் கொடைக்கானலைக் காட்டி லும் சூழலில் உயர்ந்தே நிற்கிறது சிறுமலை. சுற்றுலாவுக்கான அம்சங்கள் ஏதுமில்லாததால் கிட்டத்தட்ட ஒரு காட்டுப்பகுதியாகவே கிடக்கிறது சிறுமலை. இந்தப் பகுதியை பாதுகாத்துவரும் தமிழக வனத்துறை, கண்கொத்தி பாம்பாக சுற்றிவருவதால், சிறுமலையின் சூழல் கொஞ்சம் கூட கெடவில்லை. இதன் காரணமாகவே இந்தப் பகுதியில் கொய்மலர்கள் உள்ளிட்ட பல வகையான சாகுபடி சக்கைப் போடு போடுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி ‘ஊட்டி ரோஸ்’ என்பதை முதன் முதலாக இங்கே பயிரிட்டு வெற்றி கண்டவர்தான் இந்த ராஜாராமன். அடுத்த கட்டமாகத்தான் குடை மிளகாயை கையில் எடுத்திருக் கிறார். ஊட்டி ரோஸ் மற்றும் குடைமிளகாய் இரண்டிலும் இவர் பெற்றிருக்கும் வெற்றி, சிறுமலை உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி, தற்போது பலரும் குடை மிளகாய்க்காக பசுமைக்குடில் அமைத்து வருகின்றனர்.
ராஜாராமன் சொல்வதைக் கேட்போமா... ''எனக்கு சின்ன வயசில் இருந்தே தோட்டக் கலையில ஆர்வம் அதிகம். மதுரையில இருக்கற பாண்டியன் ஓட்டல்ல வருஷாவருஷம் நடக்குற வீட்டுத்தோட்டப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசுகள் வாங்கியி ருக்கேன். சிறுமலைக்கு ஒரு தடவை சுற்றுலா வந்தப்போ இந்த சூழ்நிலை எனக்குப் பிடிச்சுப் போச்சி. அதனால இங்க நிலத்தை வாங்கி தோட்டம் அமைக்க முடிவு செய்து, உடனடியா அதை நிறைவேத்திட்டேன்.
கொய்மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறது தெரிஞ்சு, சோதனை அடிப்படையில் 560 சதுர மீட்டர்ல மட்டும் ஊட்டி ரோஸ் பயிர் செய்தேன். அதுல எனக்கு நல்ல வெற்றி கிடைச்சதால, இன்னொரு யூனிட் போடறதுக்குண்டான முயற்சிகள்ல இறங்கினேன். அப்ப சில நண்பர்கள், தோட்டக்கலை ஆலோசகர்கள் மூலமா குடை மிளகாய் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுக்கான மார்கெட் நிலவரத்தை விசாரிச்சப்ப, நல்ல தேவை இருக் கறது தெரிஞ்சுது. ரோஜாவுக்காக அமைச்ச பசுமைக்குடில்லயே குடை மிளகாயை பயிர் பண்ணிட்டேன்.
ரோஜா மாதிரியே இந்த குடை மிளகாய்க்கும் ஓரளவுக்கு வெப்ப நிலை இருந்தா போதும். 26 டிகிரியில் இருந்து 36 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காற்றோட ஈரப்பதம் 60% முதல் 85% வரைக்கும் இருந்தாபோதும். நல்ல செம்மண் நிலமா இருக்கணும்.
சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிள காய்கள் இங்க பயிராகுது. ஒன்பது மாசத்துல இதோட காலம் முடிஞ்சிடும். திரும்பவும் நடவு செய்து வளர்க்கலாம். குளிர்காலத்துல மட்டும் சரியான படி காய்ப்பு இருக்காது. அதுக்கு ஏத்த மாதிரி ஜனவரியில் நடவு செய்ய ஆரம்பிக்கலாம். நடவு செஞ்ச தொண்ணூறாவது நாளிலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிச்சுடும். நாட்டுல இருக்கற ஃபைவ்ஸ்டார் ஓட்டல்ங்க அத்தனையிலயும் இந்த குடைமிளகாய்களுக்கு நல்ல தேவை இருக்கறதால மார்க்கெட் பண்றது சுலபமாயிடுச்சு. இங்க உற்பத்தி யாகற குடைமிளகாய் அத்தனையும் சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுக்குதான் போகுது. என் பையன் சென்னையில் இருக்கறது எனக்குக் கூடுதல் வசதி. திண்டுக்கல்ல இருந்து பஸ்ஸுல போட்டு அனுப்பிடுவேன். அதை கோயம்பேடு மார்கெட்டுல சேர்த்து எம்பையன் பணமாக்கிடுவான். அதிக தேவை இருக்கறதால பெரும்பாலும் உடனடி யாவே பணத்தைக் கொடுத்துடறாங்க. என் தோட்டத்துக் காய் தரமா இருக்கறதால கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் வரை கொடுக்கறாங்க. இதுக்கு மேலும் தொகையை உயர்த்தித் தர வியாபாரிங்க தயாராவே இருக்கிறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி உற்பத்தியை கூட்டறதுக்கான வேலைகளை செய்துகிட்டிருக்கேன்.
சாதாரணமா ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாயி லிருந்து அறுபத்தைந்து ரூபாய் வரைக்கும் நமக்கு கிடைக்கும். நேரடியா ஓட்டல்களுக்கே சப்ளை செஞ்சா அதிக லாபம் பார்க்கலாம். வெளிநாடுகள் லயும் தேவை அதிகமா இருக்கறதால, நிறைய உற்பத்தி செஞ்சா ஏற்றுமதி கூட செய்யலாம்” என்று மூச்சுவிடாமல் பேசிய ராஜாராமன், லாப விஷயங்கள் பற்றிய பட்டியலை எடுத்துப்போட்டார்.
ஆயிரம் சதுர மீட்டரில் ஆறாயிரம் செடிகள் வைக்கலாம். ஒன்பது மாதத்தில் ஒரு செடியிலிருந்து ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒன்பது மாதத்தில் 30 டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக நாற்பது ரூபாய் என்றால்கூட, ஒன்பது மாதத்தில் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். பார், நாற்று, உரம், தண்ணீர், வேலையாள் சம்பளம், பேக்கிங் உள்ளிட்ட உற்பத்திச் செலவு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். அதைக் கழித்துவிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக்குடிலுக்கு தனியாக ஆறு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். இதை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
1,000 சதுர மீட்டர் செம்மண் நிலம் அல்லது செம்மண் பரப்பிய நிலத்தை நன்றாக உழுது பசுமைக்குடில் அமைக்கவேண்டும். தட்ப வெப்பநிலையைப் பொறுத்து பசுமைக் குடிலின் அமைப்புகள் மாறுபடும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை நீக்கி, வெளிச்சத்தை மட்டும் செடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதைத் தான் பசுமைக்குடில்கள் செய்கின்றன. வெப்பநிலையையும் சீராக வைத்திருக்க அவை உதவுகின்றன.
30 ஆயிரம் கிலோ சாணி, மக்கிய தொழு உரம், நெல் போன்ற தானியங்களின் உமி 1,000 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ, பாரிடான் 20 கிலோ இதையெல்லாம் போட்டால் விதைப்பதற்கு நிலம் தயாராகி விடும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பார் (பெட்) தயார் செய்து ஒவ்வொரு பாரிலும் இரண்டு வரிசையில் நாற்றுகளை நட வேண்டும். குறுக்கு வாட்டில் 60 செ.மீ., பக்க வாட்டில் 15 செ.மீ. இருக்குமாறு வரிசையில் நடவேண்டும். ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் சொட்டு நீர்பாசன முறையில் விடவேண்டும். மற்றபடி பூச்சிகள் தாக்காமல் இருக்க, மருந்துகளை ஸ்பிரே செய்யலாம். வேறு எந்தப் பூச்சிகளும் குடிலுக்குள் நுழைந்து விடாமலிருக்க வலை களைக் கட்டி பாதுகாப்புச் செய்யலாம்.
செடி வைத்து தண்டு வளரும்போது, கவட்டை வடிவத்தில் இரண்டு தண்டுகளை மட்டுமே வளரவிட்டு மற்ற தண்டுகளை ஒடித்துவிடவேண்டும். அந்த இரண்டு முனைகளிலிருந்தும் அடுத்து தண்டுகள் வளரும்போது, முன்போலவே இரண்டு தண்டுகளை மட்டுமே வளர விடவேண்டும். அடுத்தடுத்து இப்படியே தண்டுகளை பராமரிப்பதன் மூலம் செடியில் காய்கள் நன்கு காய்க்கும். செடி வைத்த ஒரு மாதத்தில் தண்டுகளின் முனைகளில் கயிற்றைக் கட்டி மேன் பக்கமாக இழுத்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் காயின் பாரத்தை செடி தாங்கும்.
ஒவ்வொரு காயும் பெரிதாகும் அளவுக்கு இடைவெளி விட்டுப் பக்கத்தில் இருக்கின்ற பிஞ்சுகள், மொட்டுகள், இலைகள் எல்லாவற் றையும் கழித்துவிடலாம். காய் நல்ல வடிவத்தில் கிடைப்பதற்கு இது உதவும். தினமும் தவறாமல் இந்த வேலையைச் செய்து வந்தால், ஒரு காய் 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். ஒன்பது மாதம் முடிந்ததும் செடிகளை அழித்துவிட்டு நிலத்தைத் திரும்பவும் சரிசெய்து நாற்றுகளை நடலாம்.
மிகவிவரமாக தன்னுடைய தொழில்நுட் பங்களைப் பட்டியலிட்ட ராஜாராமன், ''என்னைப் பார்த்துட்டு சிறுமலையில் பத்துக்கும் மேற்பட் டவங்க பசுமைக் குடில் அமைச்சி குடைமிளகாய் பயிரிடுற முயற்சியில இறங்கியிருக் காங்க. என்னால முடிஞ்சவரைக்கும் தொழில்நுட்பங் களை பலருக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன். யார் கேட்டாலும் சொல்றதுக்கு தயாராவே இருக்கேன்'' என்று எல்லோருக்கும் அழைப்பு வைத்தார் (தொடர்புக்கு: 04512558358, 92442-14273).

Thursday, August 28, 2014

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!
 
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்''
-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.
''மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது'' என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் 'மூங்கில்தானா?' என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.
‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,
‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.
இந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.
பாலசுப்ரமணியன்
முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு'' என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிடுகின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.
அவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.
‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு.... மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.
''இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்'' என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.
''ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்'' என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384
பாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை...
பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.
ஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.
குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.

Wednesday, August 20, 2014

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான கரைசலைத் தயாரிக்க... வேப்பங்கொட்டை இடித்த தூள்-5 கிலோ, வெள்ளைப் பூண்டு-250 கிராம், கட்டைப் புகையிலை-500 கிராம் ஆகியவை தேவைப்படும். இந்த மூன்றையும் ஒரே காட்டன் துணியில் கட்டி, பத்து லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு, வடிகட்டினால்... பத்து லிட்டர் கரைசல் கிடைக்கும்.
இலை மட்கு உரம் தயாரிப்பு!
இலை மட்கு உரத்தைத் தயாரிக்க, வயலைச் சுற்றி இருக்கும் மரங்களின் இலை, தழைகளை வெட்டி சேகரிக்க வேண்டும். நிலத்தின் ஒரு மூலையில் தேவையான அளவுக்கு ஒரு குழி எடுத்து, இலை-தழைகளை ஒரு அடுக்கு போட்டு, அடுத்த அடுக்காக சாணத்தைக் கரைத்து தெளிக்கவேண்டும். அதன் மீது செம்மண் போட்டு மூடிவிடவேண்டும். இதுபோல குழி நிரம்பும் அளவுக்கு, இலை-தழை மற்றும் சாணக் கரைசல்-செம்மண் என்று மாற்றி, மாற்றி செய்யவேண்டும். அப்படியே 45 நாட்கள் வைத்திருந்து, குழியைப் திறந்து பார்த்தால்... மட்கு உரம் தயார்.

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!


மகசூல்
காசி. வேம்பையன்
பந்தல் இல்லாமலே பாகற்காய்...!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது.
ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ
மூன்று மாதத்தில்... நூறு குழி நிலத்தில் ஏழாயிரம் ரூபாய் வருமானம்.
"அந்தப் பந்தல்... இந்தப் பந்தல்னு எந்தப் பந்தலும் இதுக்குத் தேவையே... இல்லீங்க. சும்மா நிலத்துல விதைச்சி விட்டா போதும்... தரையிலயே தன்னால வளரும். வருமானத்துக்கும் வஞ்சகமிருக்காது" தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருக்கும் திருப்பனம்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுவது... பாரம்பர்ய ரகம் என்று பெருமையோடு சொல்லப்படும் மிதிபாகற்காய் பற்றித்தான்.
பந்தல் செலவுகளுக்குப் பயந்தே, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் சாகுபடி பக்கம் செல்வதை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை. இந்நிலையில், பந்தலுக்கான செலவைக் குறைப்பதற்காக 'பிரமிடு பந்தல்', 'கொட்டாரப் பந்தல்', 'நெடும்பந்தல்' என்று விதம்விதமான பந்தல்களைக் கண்டுபிடித்து, முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்தி பலன் பார்த்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள் பலரும். இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன் பார்த்திருக்கும் விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து நம்முடைய இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இங்கே இடம் பிடிக்கிறார்... 'பந்தலே தேவையில்லை' என்று களத்தில் இறங்கி, கலக்கிக் கொண்டிருக்கும் கனகராஜ்.

பெரும்பாலான விவசாயிகள் விதைப்பது பெரிய பாகற்காயைத்தான். மிகச் சிறிய அளவில் இருக்கும் மிதிபாகற்காயை அவ்வளவாக யாரும் விதைப்பதில்லை. குறைந்த அளவில், பந்தல் முறையில் இதை விளை விக்கின்றனர். சில இடங்களில், தரையிலேயே விளைவிக்கின்றனர்.
மிதிபாகற்காய்க்கு எப்போதுமே மக்களிடம் மவுசு அதிகம்தான். அதிலும் குறைந்த அளவிலானவர்களே இதை உற்பத்தி செய்வதால்... தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில்தான். சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ மிதிபாகற்காயின் விலை... குறைந்தபட்சம் 25 ரூபாய் என்பதே கடந்த சில ஆண்டுகளின் வரலாறு. அதிகபட்சம்... 50 ரூபாய் வரைக்கும் கூட போயிருக்கிறது!
"தண்ணி இருந்தா நெல்லு... இல்லாட்டி எள்ளு!"
சரி, கனகராஜ் சொல்வதற்கு காது கொடுப்போமா...?
"பதினைஞ்சு வருஷமா விவசாயம் பாத்துகிட்டு இருக்குறேன். ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வந்தா, நெல்லு நடுவேன். அறுப்பு முடிஞ்ச பிறகு தண்ணி இருந்தா... நெல்லு, இல்லாட்டி எள்ளுனு ஏதாவது ஒரு பயிரை விதைச்சுடுவேன். அதேசமயம், கோடையில வயலைச் சும்மா போடறதில்ல. கண்டிப்பா ஒரு போகத்துக்கு மட்டும் மிதிபாகற்காயைப் போட்டுடுவேன்" என்று சுருக்கமாக அறிமுகப் படலம் முடித்தவர், சாகுபடி முறைகளைச் சொன்னார். அதை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சிறப்பான சித்திரைப் பட்டம்!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது. மணல் பாங்கான வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் இதற்கு ஏற்றது. நடவுக்கு முன் நிலத்தை நான்கு உழவு போட்டு, மூன்றடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில், 15 அடி நீள பார் அமைக்க வேண்டும். இரண்டு பாருக்கும் இடையிலான மூன்று அடி இடைவெளி நிலத்தில்தான் விதைக்கவேண்டும். அதாவது, அரை அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு எருவைப் போட்டு மூடி, குழிக்கு ஐந்து விதைகள் வீதம் ஊன்றினால் போதும். 100 குழி (சுமார் 33 சென்ட்) நிலத்துக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
ஏழாவது நாளில் முளை வரும். 15 முதல் 20 நாட்களில் செடியைச் சுற்றி இருக்கும் களைகளை அகற்றிவிட்டு, குழிக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தை வைத்து தண்ணீர் கட்டவேண்டும். 25ம் நாளில் இருந்து கொடி படர ஆரம்பிக்கும். 35ம் நாளுக்குள்ளாக பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் கொடியின் வளர்ச்சிக்காக ஏழு கிலோ யூரியா, ஏழு கிலோ பொட்டாஷை கலந்து, கொடிகளின் வேர் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக... கொடுக்க வேண்டும் (நான்கு விரல்களால் அள்ளி வைப்பது).
45 முதல் 50ம் நாளில் அறுவடை ஆரம்பமாகிவிடும். அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பத்து கிலோ யூரியா, பத்து கிலோ பொட்டாஷ் கலந்து, தூருக்குத் தூர் கொஞ்சம் வைத்து தண்ணீர் கட்டவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் தண்ணீர் கட்டினால் போதும்.
பறிப்புக்கு 100 கிலோ!
அசுவினி, பச்சைப் புழு ஆகியவற்றின் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். பத்து லிட்டர் டேங்க் ஒன்றுக்கு, 25 மில்லி வீதம் டைமெத்தேட் மருந்தினைக் கலந்து தெளித்தால் போதும் (100 குழி நிலத்துக்கு 4 டேங்க்). முதல் பறிப்பைத் தொடர்ந்து, ஐந்து நாள் இடைவெளியில் காய் பறிக்கலாம். அதாவது, 50ம் நாள் தொடங்கி, 140ம் நாள் வரை 18 தடவை காய் பறிக்கலாம். ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ கிடைக்கும்."
இதுதான் அவர் சொன்ன பாடம்.
"மூணு மாசத்துல ஏழாயிரம் ரூபாய்!"
நிறைவாகப் பேசிய கனகராஜ், "மிதிபாகற்காய்க்கு ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவங்க கேக்குற அளவுக்கு நம்மளால உற்பத்தி பண்ணி கொடுக்க முடியறதில்ல. அதுக்குக் காரணம்... பெரும்பாலும் கோடையிலதான் இதைப் போட வேண்டியிருக்கு. அப்பத்தான் தண்ணி இல்லாம இருக்கும். தரையிலேயே இதை விதைக்க முடியும். அதேசமயம், பயிர் பண்றதுக்கும் தண்ணி இல்லாம போயிடறதால, அதிக அளவுல இதை விதைக்க முடியறதில்ல. அப்புறம், இந்தக் காயை பறிக்கறதும் கொஞ்சம் சிரமமான வேலை. அதுக்குப் பயந்துகிட்டே பல பேரு கிட்ட நெருங்க மாட்டாங்க. ஆனா, நான் இதை விடாம செய்துகிட்டிருக்கேன். அதுக்குக் காரணம்... இதுல கிடைக்கிற ஒரு லாபம்தான்!
விளைஞ்சதை, பக்கத்துல இருக்கற திருவையாறு மார்க்கெட்டு வியாபாரிக்குத்தான் கொடுக்கிறேன். ஒரு கிலோ காய் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை வெச்சி எங்ககிட்ட வாங்கிக்கிறார். சராசரி கிலோ 9 ரூபாய். கோடையில சும்மா போட்டு வைக்காம, முடிஞ்ச வரைக்கும் பாடுபட்டா... மூணு மாசத்துல... நூறு குழி நிலத்துல ஒரு ஏழாயிரம் ரூபாயைக் கையில பாக்கலாம். அதை வெச்சு நாலு நல்லது கெட்டது பாத்துக்க முடியுமே!" என்று உற்சாகத்தோடு சொன்னார்.
பாரம்பர்ய முறையிலும் பயிரிடலாமே!
பாரம்பர்ய ரகமான மிதிபாகற்காயை இவர் பயிரிடுவது ரசாயன முறை விவசாயத்தில். இதையே இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா... 'முடியும்' என்றால் எப்படி? என்பது போன்ற கேள்விகள் எழ, கோவில்பட்டி, வேளாண்மை அலுவலர் செல்வத்திடம் கேட்டோம்.
"மிதிபாகற்காயை தாராளமாக இயற்கை முறை விவசாயத்திலும் செய்யலாம். ரசாயன உரத்துக்கு மாற்றாக, எரு, மண்புழு உரம், எலும்புத்தூள், இலை மட்கு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அத்தனைச் சத்துக்களும் கிடைத்துவிடும். இலை மட்கு உரத்தைப் பயன்படுத்தினால் (பார்க்கப் பெட்டிச் செய்தி), டி.ஏ.பி. உரத்தில் இருக்கும் அத்தனைச் சத்துக்களும் நிலத்துக்குக் கிடைத்துவிடும்.
நீங்களே தயாரிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல்!
பாகல் கொடியில் காய் எடுக்க ஆரம்பித்ததுமே... கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால், வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துகள் கிடைத்துவிடும். அதோடு, ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை இடித்தும் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, நாமே வேப்பங்கொட்டையைச் சேகரித்து, இடித்துக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் வேப்பம்முத்துக்களில் இருக்கும் 23 வித சத்துகளும் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கில், வேப்பம்முத்துகளில் இருக்கும் ‘அசாடிரக்டின்’ என்ற பொருளை தனியாகப் பிரித்துவிட்டே கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சத்துக்கள் அதில் இருக்காது. சமயங்களில் புளியன் கொட்டைத் தூள் கலந்தும் விற்கப்படுகிறது.
புகையிலைக் கரைசலே போதும்!
நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், ஒரு முறை தெளிக்கப்பட்டாலே, ஐந்து வருடத்துக்கு அதனுடய நஞ்சு, நம் நிலத்திலேயே இருக்கும். எனவே, அதற்கு மாற்றாக, இயற்கையாக கிடைக்கும் வேம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டி தயார் செய்து பயன்படுத்தினாலே நல்ல பலன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது.
அசுவினி, பச்சைப் புழு, தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகள்தான் பாகற்காயைத் தாக்கும். இவற்றைத் தடுக்க, வேப்பங்கொட்டை, பூண்டு, புகையிலை கலந்த கரைசலை அடித்தாலே போதும் (பார்க்கப் பெட்டிச் செய்தி). டேங்குக்கு (பத்து லிட்டர்), புகையிலைக் கரைசல் ஒரு லிட்டர், காதி சோப் (100 கிராம்) கரைசல், ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து தெளித்தாலே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தக் கரைசலை மாலை வேளையில் தெளிப்பதுதான் நல்லது.
இதேபோல பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது நிலத்தில் பயிருக்குத் தேவையான சத்துகளும், பூச்சி, நோய் தொந்தரவும் குறைவாகவே இருக்கும்.
ரசாயனமோ... இயற்கையோ... பந்தல் இல்லாமல் பாகற்காய் விளையப்போவதில் சந்தேகமில்லை. ஆனால், நஞ்சு இல்லாமலும் விளைவிக்கவேண்டும் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்யவேண்டும்" என்று இயல்பாகச் சொல்லி முடித்தார் செல்வம்!
படங்கள் ஆர். குமரேசன், மு. நியாஸ் அகமது