Thursday, August 28, 2014

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!
 
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்''
-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.
''மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது'' என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் 'மூங்கில்தானா?' என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.
‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,
‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.
இந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.
பாலசுப்ரமணியன்
முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு'' என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிடுகின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.
அவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.
‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு.... மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.
''இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்'' என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.
''ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்'' என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384
பாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை...
பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.
ஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.
குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.

Wednesday, August 20, 2014

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான கரைசலைத் தயாரிக்க... வேப்பங்கொட்டை இடித்த தூள்-5 கிலோ, வெள்ளைப் பூண்டு-250 கிராம், கட்டைப் புகையிலை-500 கிராம் ஆகியவை தேவைப்படும். இந்த மூன்றையும் ஒரே காட்டன் துணியில் கட்டி, பத்து லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு, வடிகட்டினால்... பத்து லிட்டர் கரைசல் கிடைக்கும்.
இலை மட்கு உரம் தயாரிப்பு!
இலை மட்கு உரத்தைத் தயாரிக்க, வயலைச் சுற்றி இருக்கும் மரங்களின் இலை, தழைகளை வெட்டி சேகரிக்க வேண்டும். நிலத்தின் ஒரு மூலையில் தேவையான அளவுக்கு ஒரு குழி எடுத்து, இலை-தழைகளை ஒரு அடுக்கு போட்டு, அடுத்த அடுக்காக சாணத்தைக் கரைத்து தெளிக்கவேண்டும். அதன் மீது செம்மண் போட்டு மூடிவிடவேண்டும். இதுபோல குழி நிரம்பும் அளவுக்கு, இலை-தழை மற்றும் சாணக் கரைசல்-செம்மண் என்று மாற்றி, மாற்றி செய்யவேண்டும். அப்படியே 45 நாட்கள் வைத்திருந்து, குழியைப் திறந்து பார்த்தால்... மட்கு உரம் தயார்.

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!


மகசூல்
காசி. வேம்பையன்
பந்தல் இல்லாமலே பாகற்காய்...!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது.
ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ
மூன்று மாதத்தில்... நூறு குழி நிலத்தில் ஏழாயிரம் ரூபாய் வருமானம்.
"அந்தப் பந்தல்... இந்தப் பந்தல்னு எந்தப் பந்தலும் இதுக்குத் தேவையே... இல்லீங்க. சும்மா நிலத்துல விதைச்சி விட்டா போதும்... தரையிலயே தன்னால வளரும். வருமானத்துக்கும் வஞ்சகமிருக்காது" தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருக்கும் திருப்பனம்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுவது... பாரம்பர்ய ரகம் என்று பெருமையோடு சொல்லப்படும் மிதிபாகற்காய் பற்றித்தான்.
பந்தல் செலவுகளுக்குப் பயந்தே, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் சாகுபடி பக்கம் செல்வதை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை. இந்நிலையில், பந்தலுக்கான செலவைக் குறைப்பதற்காக 'பிரமிடு பந்தல்', 'கொட்டாரப் பந்தல்', 'நெடும்பந்தல்' என்று விதம்விதமான பந்தல்களைக் கண்டுபிடித்து, முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்தி பலன் பார்த்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள் பலரும். இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன் பார்த்திருக்கும் விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து நம்முடைய இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இங்கே இடம் பிடிக்கிறார்... 'பந்தலே தேவையில்லை' என்று களத்தில் இறங்கி, கலக்கிக் கொண்டிருக்கும் கனகராஜ்.

பெரும்பாலான விவசாயிகள் விதைப்பது பெரிய பாகற்காயைத்தான். மிகச் சிறிய அளவில் இருக்கும் மிதிபாகற்காயை அவ்வளவாக யாரும் விதைப்பதில்லை. குறைந்த அளவில், பந்தல் முறையில் இதை விளை விக்கின்றனர். சில இடங்களில், தரையிலேயே விளைவிக்கின்றனர்.
மிதிபாகற்காய்க்கு எப்போதுமே மக்களிடம் மவுசு அதிகம்தான். அதிலும் குறைந்த அளவிலானவர்களே இதை உற்பத்தி செய்வதால்... தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில்தான். சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ மிதிபாகற்காயின் விலை... குறைந்தபட்சம் 25 ரூபாய் என்பதே கடந்த சில ஆண்டுகளின் வரலாறு. அதிகபட்சம்... 50 ரூபாய் வரைக்கும் கூட போயிருக்கிறது!
"தண்ணி இருந்தா நெல்லு... இல்லாட்டி எள்ளு!"
சரி, கனகராஜ் சொல்வதற்கு காது கொடுப்போமா...?
"பதினைஞ்சு வருஷமா விவசாயம் பாத்துகிட்டு இருக்குறேன். ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வந்தா, நெல்லு நடுவேன். அறுப்பு முடிஞ்ச பிறகு தண்ணி இருந்தா... நெல்லு, இல்லாட்டி எள்ளுனு ஏதாவது ஒரு பயிரை விதைச்சுடுவேன். அதேசமயம், கோடையில வயலைச் சும்மா போடறதில்ல. கண்டிப்பா ஒரு போகத்துக்கு மட்டும் மிதிபாகற்காயைப் போட்டுடுவேன்" என்று சுருக்கமாக அறிமுகப் படலம் முடித்தவர், சாகுபடி முறைகளைச் சொன்னார். அதை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சிறப்பான சித்திரைப் பட்டம்!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது. மணல் பாங்கான வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் இதற்கு ஏற்றது. நடவுக்கு முன் நிலத்தை நான்கு உழவு போட்டு, மூன்றடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில், 15 அடி நீள பார் அமைக்க வேண்டும். இரண்டு பாருக்கும் இடையிலான மூன்று அடி இடைவெளி நிலத்தில்தான் விதைக்கவேண்டும். அதாவது, அரை அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு எருவைப் போட்டு மூடி, குழிக்கு ஐந்து விதைகள் வீதம் ஊன்றினால் போதும். 100 குழி (சுமார் 33 சென்ட்) நிலத்துக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
ஏழாவது நாளில் முளை வரும். 15 முதல் 20 நாட்களில் செடியைச் சுற்றி இருக்கும் களைகளை அகற்றிவிட்டு, குழிக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தை வைத்து தண்ணீர் கட்டவேண்டும். 25ம் நாளில் இருந்து கொடி படர ஆரம்பிக்கும். 35ம் நாளுக்குள்ளாக பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் கொடியின் வளர்ச்சிக்காக ஏழு கிலோ யூரியா, ஏழு கிலோ பொட்டாஷை கலந்து, கொடிகளின் வேர் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக... கொடுக்க வேண்டும் (நான்கு விரல்களால் அள்ளி வைப்பது).
45 முதல் 50ம் நாளில் அறுவடை ஆரம்பமாகிவிடும். அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பத்து கிலோ யூரியா, பத்து கிலோ பொட்டாஷ் கலந்து, தூருக்குத் தூர் கொஞ்சம் வைத்து தண்ணீர் கட்டவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் தண்ணீர் கட்டினால் போதும்.
பறிப்புக்கு 100 கிலோ!
அசுவினி, பச்சைப் புழு ஆகியவற்றின் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். பத்து லிட்டர் டேங்க் ஒன்றுக்கு, 25 மில்லி வீதம் டைமெத்தேட் மருந்தினைக் கலந்து தெளித்தால் போதும் (100 குழி நிலத்துக்கு 4 டேங்க்). முதல் பறிப்பைத் தொடர்ந்து, ஐந்து நாள் இடைவெளியில் காய் பறிக்கலாம். அதாவது, 50ம் நாள் தொடங்கி, 140ம் நாள் வரை 18 தடவை காய் பறிக்கலாம். ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ கிடைக்கும்."
இதுதான் அவர் சொன்ன பாடம்.
"மூணு மாசத்துல ஏழாயிரம் ரூபாய்!"
நிறைவாகப் பேசிய கனகராஜ், "மிதிபாகற்காய்க்கு ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவங்க கேக்குற அளவுக்கு நம்மளால உற்பத்தி பண்ணி கொடுக்க முடியறதில்ல. அதுக்குக் காரணம்... பெரும்பாலும் கோடையிலதான் இதைப் போட வேண்டியிருக்கு. அப்பத்தான் தண்ணி இல்லாம இருக்கும். தரையிலேயே இதை விதைக்க முடியும். அதேசமயம், பயிர் பண்றதுக்கும் தண்ணி இல்லாம போயிடறதால, அதிக அளவுல இதை விதைக்க முடியறதில்ல. அப்புறம், இந்தக் காயை பறிக்கறதும் கொஞ்சம் சிரமமான வேலை. அதுக்குப் பயந்துகிட்டே பல பேரு கிட்ட நெருங்க மாட்டாங்க. ஆனா, நான் இதை விடாம செய்துகிட்டிருக்கேன். அதுக்குக் காரணம்... இதுல கிடைக்கிற ஒரு லாபம்தான்!
விளைஞ்சதை, பக்கத்துல இருக்கற திருவையாறு மார்க்கெட்டு வியாபாரிக்குத்தான் கொடுக்கிறேன். ஒரு கிலோ காய் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை வெச்சி எங்ககிட்ட வாங்கிக்கிறார். சராசரி கிலோ 9 ரூபாய். கோடையில சும்மா போட்டு வைக்காம, முடிஞ்ச வரைக்கும் பாடுபட்டா... மூணு மாசத்துல... நூறு குழி நிலத்துல ஒரு ஏழாயிரம் ரூபாயைக் கையில பாக்கலாம். அதை வெச்சு நாலு நல்லது கெட்டது பாத்துக்க முடியுமே!" என்று உற்சாகத்தோடு சொன்னார்.
பாரம்பர்ய முறையிலும் பயிரிடலாமே!
பாரம்பர்ய ரகமான மிதிபாகற்காயை இவர் பயிரிடுவது ரசாயன முறை விவசாயத்தில். இதையே இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா... 'முடியும்' என்றால் எப்படி? என்பது போன்ற கேள்விகள் எழ, கோவில்பட்டி, வேளாண்மை அலுவலர் செல்வத்திடம் கேட்டோம்.
"மிதிபாகற்காயை தாராளமாக இயற்கை முறை விவசாயத்திலும் செய்யலாம். ரசாயன உரத்துக்கு மாற்றாக, எரு, மண்புழு உரம், எலும்புத்தூள், இலை மட்கு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அத்தனைச் சத்துக்களும் கிடைத்துவிடும். இலை மட்கு உரத்தைப் பயன்படுத்தினால் (பார்க்கப் பெட்டிச் செய்தி), டி.ஏ.பி. உரத்தில் இருக்கும் அத்தனைச் சத்துக்களும் நிலத்துக்குக் கிடைத்துவிடும்.
நீங்களே தயாரிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல்!
பாகல் கொடியில் காய் எடுக்க ஆரம்பித்ததுமே... கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால், வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துகள் கிடைத்துவிடும். அதோடு, ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை இடித்தும் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, நாமே வேப்பங்கொட்டையைச் சேகரித்து, இடித்துக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் வேப்பம்முத்துக்களில் இருக்கும் 23 வித சத்துகளும் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கில், வேப்பம்முத்துகளில் இருக்கும் ‘அசாடிரக்டின்’ என்ற பொருளை தனியாகப் பிரித்துவிட்டே கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சத்துக்கள் அதில் இருக்காது. சமயங்களில் புளியன் கொட்டைத் தூள் கலந்தும் விற்கப்படுகிறது.
புகையிலைக் கரைசலே போதும்!
நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், ஒரு முறை தெளிக்கப்பட்டாலே, ஐந்து வருடத்துக்கு அதனுடய நஞ்சு, நம் நிலத்திலேயே இருக்கும். எனவே, அதற்கு மாற்றாக, இயற்கையாக கிடைக்கும் வேம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டி தயார் செய்து பயன்படுத்தினாலே நல்ல பலன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது.
அசுவினி, பச்சைப் புழு, தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகள்தான் பாகற்காயைத் தாக்கும். இவற்றைத் தடுக்க, வேப்பங்கொட்டை, பூண்டு, புகையிலை கலந்த கரைசலை அடித்தாலே போதும் (பார்க்கப் பெட்டிச் செய்தி). டேங்குக்கு (பத்து லிட்டர்), புகையிலைக் கரைசல் ஒரு லிட்டர், காதி சோப் (100 கிராம்) கரைசல், ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து தெளித்தாலே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தக் கரைசலை மாலை வேளையில் தெளிப்பதுதான் நல்லது.
இதேபோல பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது நிலத்தில் பயிருக்குத் தேவையான சத்துகளும், பூச்சி, நோய் தொந்தரவும் குறைவாகவே இருக்கும்.
ரசாயனமோ... இயற்கையோ... பந்தல் இல்லாமல் பாகற்காய் விளையப்போவதில் சந்தேகமில்லை. ஆனால், நஞ்சு இல்லாமலும் விளைவிக்கவேண்டும் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்யவேண்டும்" என்று இயல்பாகச் சொல்லி முடித்தார் செல்வம்!
படங்கள் ஆர். குமரேசன், மு. நியாஸ் அகமது



                            
   

Wednesday, August 13, 2014

கனமும் அதிகம்... சுவையும் அதிகம்!

கனமும் அதிகம்... சுவையும் அதிகம்!
ஆச்சர்யம்
தூரன்நம்பி
 
ஜீரோ பட்ஜெட்
கனமும் அதிகம்..... சுவையும் அதிகம்!
ஜீவாமிர்த மகத்துவம்
காவிரியின் தாய் வீடான குடகு மலையின் மடியில் மகிழ்ந்து விளையாடும் க்ரோஹள்ளி கிராமத்தில் 'ஜீரோ பட்ஜெட்' கொடி கட்டிப் பறக்கும் தோட்டத்தை கடந்த இதழுக்கு முந்தைய இதழில் பார்வையிட்டோம். அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர்... கர்நாடக மாநில விவசாய சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் லோக்கேஷ்ராஜ் அர்ஸ் (கடந்த இதழில் லோகராஜ் என்று தவறாக இடம் பெற்றுவிட்டது). தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்தி, வாழ வைத்துக்கொண்டிருக்கும் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட்டை அக்கம் பக்கம் கிராம விவசாயிகளிடம் பரப்புவதை தற்போது ஒரு தொண்டாகவே செய்துவருகிறார் லோக்கேஷ்ராஜ்.
அப்படி அவரிடம் பாடம் கற்றவர்களில் அவருடைய அக்கா மகன்களான ஹரீஸ் அர்ஸ் மற்றும் மகேஷ் அர்ஸ் ஆகியோரும் அடக்கம். இந்த விஷயத்தை நம்மிடம் சொல்லி, பிரியபட்டணம் தாலூகாவில் உள்ள தொட்டபேலா கிராமத்தில் இருக்கும் தன்னுடைய அக்காவின் தோட்டத்துக்கு நம்மை அனுப்பி வைத்தார் லோக்கேஷ்ராஜ். 

ஹரீஸ் அர்ஸ், வணிகவியல் பட்டதாரி. மகேஷ் அர்ஸ், பொறியியல் பட்டதாரி. படித்து முடித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பம், வங்கி, அரசு என்று எந்த வேலைகளுக்கும் முயற்சிக்காமல், முழுமையாக விவசாயத்தில் குதித்து விட்ட இருவரும், தற்போது கடைபிடிப்பது முழுக்க ஜீரோ பட்ஜெட்!
மதிய நேரத்து சூரியனின் சூடு கொஞ்சம் போல பதம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் தோட்டத்தில் நுழைந்தோம். குலைகுலையாக காய்த்துத் தொங்கும் தென்னந்தோப்புக்குள் குஷியாக எங்களை அழைத்துச் சென்றனர். 20 ஏக்கரில் தென்னையும், 10 ஏக்கரில் பாக்கு மரங்களும் பரந்து விரிந்து பூமிக்கு பசுமைப் பந்தல் போட்டி ருந்தன. காய்த்து, காய்ந்த நெற்றுத் தேங்காய்கள் ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கின்றன. களைகள் இஷ்டத்துக்கும் வளர்ந்து கிடக்க... வித்தியா சமான தோற்றத்திலிருக்கும் இயந்திர கத்தி கொண்டு களைகளை கத்தரித்து கொண்டு இருந்தார் ஒருவர்.
'‘இவர் ஒருவர்தான் இந்த 30 ஏக்கரையும் நிர்வகிக்கிறார்’' என்று அவரை அறிமுகம் செய்து வைத்த ஹரீஸ் அர்ஸ், தொடர்ந்தார்.
‘‘எல்லோரையும் போல நாங்களும் வழக்க மான ரசாயன உர விவசாயிகளாகத்தான் இருந்தோம். நான்கு ஆண்டுகளாகத்தான் பாலேக்கரின் தத்துவப்படி ஜீரோ பட்ஜெட் விவசாயிகளாக மாறியிருக்கிறோம். இதற்குக் காரணம் எங்களுடைய மாமா (லோக்கேஷ்ராஜ் அர்ஸ்). இந்த விவசாயத்தில் தான் வெற்றி கண்டதையடுத்து, எங்களுக்கும் அதை கற்றுக் கொடுத்ததுதான். எங்களிடம் இருபதுக்கும் அதிகமான நாட்டுப் பசு மாடுகள் இருப்பதால், ஜீவாமிர்தம் தயார் செய்வதில் எந்தச் சிரமமும் இல்லை. அதிகளவில் சாணம் கிடைப் பதால், ஜீவாமிர்தம் தயாரிக்க பீப்பாய்கள் போதவில்லை. எனவே, 10 அடிக்கு 10 அடி நீள, அகலம்... இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுத்து, அதில் பாலிதீன் பேப்பரை விரித்து தொட்டி போல உருவாக்கியுள்ளோம். அதில்தான் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். பிறகு, ஜீவாமிர்தக் கரைசலை, அந்த தொட்டிக்கு கீழ் இருக்கும் மற்றொரு தொட்டிக்கு அனுப்புகிறோம். அதில் கிணற்று நீரையும் கலந்துவிடுவோம். இந்த நீரை தனியாக ஒரு டீசல் என்ஜின் கொண்டு, தெளிப்புநீர் (ஸ்பிரிங்லர்) குழாயுடன் இணைத்துள்ளோம். அதன் மூலமாக தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு ஜீவாமிர்த பாசனம் நடக்கிறது.
ஜீரோ பட்ஜெட்டின் 4 முக்கியப் பகுதி களான பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், மூடாக்கு (Mulching) வாஸ்பா (தேவாம்சம்) என்ற நான்கையும் மனதில் நிறுத்தித்தான் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் பழைய முறைப் படியான விவசாயத்தில் விதைத்தவைதான் இந்த மரங்கள். அதனால் பீஜாமிர்தத்துக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்றாலும் ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிய பிறகு, ஜீவா மிர்தம் மட்டுமே கொடுக்கிறோம். இதுதான் பயிர்களுக்கு உயிர். அதனால் அதை நாங்கள் மிகவும் கவனமாக தயார்செய்து கொடுத்து வருகிறோம். மூன்றாவதான மூடாக்கு போடுவதுதான் எங்களுக்குப் பெரும் பிரச்னை. 30 ஏக்கருக்கு மூடாக்கு என்பது சற்று கடின மான விஷயம். மேலும் தெளிப்புநீர் முறையில் நீர் கொடுப்பதால் பூமிப் பரப்பு எங்கும் நீர் விழும். அதனால் களைகள் அதிகமாக வளர்ந்துவிடுகின்றன. இது ஒன்றுதான் பெரும் பிரச்னையாக இருந்தது.
களைகள் எங்களை கவலையில் போட்டு அமுக்கின. 3 மாதங்களுக்கு ஒரு முறை 50 ஆள், 100 ஆள் என்று ஆட்களை வைத்து களைகளை வெட்டி எடுத்தோம். ஆனால், அவ்வளவு சுலபமாக எங்கள் தோட்டத்துக்கு ஆட்கள் வந்துவிடவில்லை. காரணம், ஆள் உயரப் புதராக களைகள் வளர்ந்து கிடந்ததால் பாம்புகள் படையெடுத்து வந்து குடிபுகுந்து விட்டதுதான். அதனால், காட்டுக்குள் கால் வைக்கவே பயப்பட்டனர். 'அடடா... பாலேக்கர் சித்தாந்தத்துக்கு மாறி தவறு செய்து விட்டோமோ?' என்று கூட சிந்தனை ஓட ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நின்றோம். இந்த இக்கட்டான நிலையில்தான் டீசலில் இயங்கும் ஒரு சிறிய மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரு 4 அடி பைப், அதன் நுனியில் இரண்டு பிளேடுகள் கொண்ட கருவி ஒன்றிருக்கிறது. தெளிப்பான் (ஸ்பிரேயர்) போல அதை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரே ஆள் நாள் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் வரை களைகளை வெட்டி எடுக்கமுடியும் என்றொரு விஷயத்தைக் கேள்விப்பட்டோம். உடனடியாக அதை வாங்கி வந்து எங்கள் தோட்டத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். 
இத்தாலிய நாட்டுத் தயாரிப்பான இயந்திர களை வெட்டும் கருவியின் விலை 26 ஆயிரம் ரூபாய். இந்தக் கருவியை வாங்க, மாநில மற்றும் மத்திய அரசுகள் 50% மானியம் கொடுக்கின்றன. மீதித் தொகையை நாம் போடவேண்டும். இந்தக் கருவியை நாங்கள் மைசூரில் வாங்கினோம்'' என்று கருவி கதை சொன்ன ஹரீஸ்,
''வெட்டப்பட்ட களைகள் இப்போது மூடாக்காக மாறிவிட்டன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்ட மகிழ்ச்சியோடு விவ சாயத்தை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று நிறுத்தினார்.
தென்னையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இலைக்கருகல் நோய் காணப்பட்டதைச் சுட்டிக் காட்டி,‘‘ இலையில் இருக்கும் பச்சையத்தை பூச்சிகள் சுரண்டி இருக்கிறதே’’ என்றோம்.
இதற்கு மகேஷ் அர்ஸ் பதில் தந்தார். ‘‘அதையேன் கேட்கிறீர்கள். ஒரு கட்டத்தில் குருத்து மட்டை களைத் தவிர அனைத்து மட்டை களின் பச்சையத்தை சுரண்டி எடுக்கும் பூச்சிகளின் தாக்குதலால் மட்டைகள் கருகிவிட்டன. தோப்பையே அழித்து விடலாமா என்று கூட கலங்கிப் போனோம். மீண்டும் பாலேக்கரின் ஆலோசனைகள்தான் எங்களுக்கு கை கொடுத்தது. ‘ஜீவாமிர்தத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுங்கள்’ என்றார். எங்களிடம் இருபது பசு மாடுகள் இருப்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக மரங்களில் பசுமைத் துளிர்க்க ஆரம்பித்தது. மீண்டும் எங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மத்தளம் கொட்டியது. இந்த இரண்டு வருடங்களில் தோப்பு முழுக்க பசுமைக் கூடியதோடு, மரத்துக்கு 150 முதல் 250 காய்கள் வரை கிடைக்கின்றன. ஆக, ஜீவாமிர்தம் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது’’ என்று பெருமிதத்துடன் கூறிய மகேஷ்,
‘‘இன்னொரு அதிசயமும் இங்கே நடந்திருக்கிறது’’ என்று ஆவலைத் தூண்டிவிட்டார்.
தோட்டத்து வேலை ஆளிடம் ஒரு தேங்காயை வாங்கி உடைத்து நம்மிடம் காண்பித்தார்.
‘‘எல்லா தேங்காயிலும் இருப்பது போல இதிலும் பருப்புதானே இருக்கிறது’’ என்றோம்.
‘‘பாம் இருக்கும் என்று நினைத் தீர்களோ...?'' என்று நக்கலடித்துச் சிரித்த மகேஷ்,
''இந்தத் தேங்காய் பருப்பின் கனத்தைப் பாருங்கள். ஜீவாமிர்தம் கொடுப்பதற்கு முன்பு கிடைத்த பருப்பின் கனத்தை விட 20 முதல் 30% வரை பருப்பின் கனம் கூடி இருக்கிறது’’ என்று சொல்லி ஆச்சர் யப்படுத்தினார்.
அதன் பிறகே நாமும் அந்த அதிசயத்தை உணர்ந்து, தேங்காயை கொஞ்சம் சுவைத்தும் பார்த்தோம். கனம் மட்டுமல்ல, மிகவும் ருசி கூடிப்போனதாகவும் இருந்தது.
ஊடுபயிர்களாக மிளகு, ஏலம்... தழைச்சத்துக்கான கிளரிசீடியா செடிகள் என்று தோட்டம் முழுக்க விளைந்து கிடக்கின்றன. அவையெல்லாம் எப்படி... தோட்டத்தின் வருமானம் எப்படி?