Wednesday, August 20, 2014

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!


மகசூல்
காசி. வேம்பையன்
பந்தல் இல்லாமலே பாகற்காய்...!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது.
ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ
மூன்று மாதத்தில்... நூறு குழி நிலத்தில் ஏழாயிரம் ரூபாய் வருமானம்.
"அந்தப் பந்தல்... இந்தப் பந்தல்னு எந்தப் பந்தலும் இதுக்குத் தேவையே... இல்லீங்க. சும்மா நிலத்துல விதைச்சி விட்டா போதும்... தரையிலயே தன்னால வளரும். வருமானத்துக்கும் வஞ்சகமிருக்காது" தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருக்கும் திருப்பனம்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுவது... பாரம்பர்ய ரகம் என்று பெருமையோடு சொல்லப்படும் மிதிபாகற்காய் பற்றித்தான்.
பந்தல் செலவுகளுக்குப் பயந்தே, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் சாகுபடி பக்கம் செல்வதை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை. இந்நிலையில், பந்தலுக்கான செலவைக் குறைப்பதற்காக 'பிரமிடு பந்தல்', 'கொட்டாரப் பந்தல்', 'நெடும்பந்தல்' என்று விதம்விதமான பந்தல்களைக் கண்டுபிடித்து, முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்தி பலன் பார்த்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள் பலரும். இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன் பார்த்திருக்கும் விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து நம்முடைய இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இங்கே இடம் பிடிக்கிறார்... 'பந்தலே தேவையில்லை' என்று களத்தில் இறங்கி, கலக்கிக் கொண்டிருக்கும் கனகராஜ்.

பெரும்பாலான விவசாயிகள் விதைப்பது பெரிய பாகற்காயைத்தான். மிகச் சிறிய அளவில் இருக்கும் மிதிபாகற்காயை அவ்வளவாக யாரும் விதைப்பதில்லை. குறைந்த அளவில், பந்தல் முறையில் இதை விளை விக்கின்றனர். சில இடங்களில், தரையிலேயே விளைவிக்கின்றனர்.
மிதிபாகற்காய்க்கு எப்போதுமே மக்களிடம் மவுசு அதிகம்தான். அதிலும் குறைந்த அளவிலானவர்களே இதை உற்பத்தி செய்வதால்... தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில்தான். சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ மிதிபாகற்காயின் விலை... குறைந்தபட்சம் 25 ரூபாய் என்பதே கடந்த சில ஆண்டுகளின் வரலாறு. அதிகபட்சம்... 50 ரூபாய் வரைக்கும் கூட போயிருக்கிறது!
"தண்ணி இருந்தா நெல்லு... இல்லாட்டி எள்ளு!"
சரி, கனகராஜ் சொல்வதற்கு காது கொடுப்போமா...?
"பதினைஞ்சு வருஷமா விவசாயம் பாத்துகிட்டு இருக்குறேன். ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வந்தா, நெல்லு நடுவேன். அறுப்பு முடிஞ்ச பிறகு தண்ணி இருந்தா... நெல்லு, இல்லாட்டி எள்ளுனு ஏதாவது ஒரு பயிரை விதைச்சுடுவேன். அதேசமயம், கோடையில வயலைச் சும்மா போடறதில்ல. கண்டிப்பா ஒரு போகத்துக்கு மட்டும் மிதிபாகற்காயைப் போட்டுடுவேன்" என்று சுருக்கமாக அறிமுகப் படலம் முடித்தவர், சாகுபடி முறைகளைச் சொன்னார். அதை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சிறப்பான சித்திரைப் பட்டம்!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது. மணல் பாங்கான வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் இதற்கு ஏற்றது. நடவுக்கு முன் நிலத்தை நான்கு உழவு போட்டு, மூன்றடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில், 15 அடி நீள பார் அமைக்க வேண்டும். இரண்டு பாருக்கும் இடையிலான மூன்று அடி இடைவெளி நிலத்தில்தான் விதைக்கவேண்டும். அதாவது, அரை அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு எருவைப் போட்டு மூடி, குழிக்கு ஐந்து விதைகள் வீதம் ஊன்றினால் போதும். 100 குழி (சுமார் 33 சென்ட்) நிலத்துக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
ஏழாவது நாளில் முளை வரும். 15 முதல் 20 நாட்களில் செடியைச் சுற்றி இருக்கும் களைகளை அகற்றிவிட்டு, குழிக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தை வைத்து தண்ணீர் கட்டவேண்டும். 25ம் நாளில் இருந்து கொடி படர ஆரம்பிக்கும். 35ம் நாளுக்குள்ளாக பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் கொடியின் வளர்ச்சிக்காக ஏழு கிலோ யூரியா, ஏழு கிலோ பொட்டாஷை கலந்து, கொடிகளின் வேர் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக... கொடுக்க வேண்டும் (நான்கு விரல்களால் அள்ளி வைப்பது).
45 முதல் 50ம் நாளில் அறுவடை ஆரம்பமாகிவிடும். அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பத்து கிலோ யூரியா, பத்து கிலோ பொட்டாஷ் கலந்து, தூருக்குத் தூர் கொஞ்சம் வைத்து தண்ணீர் கட்டவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் தண்ணீர் கட்டினால் போதும்.
பறிப்புக்கு 100 கிலோ!
அசுவினி, பச்சைப் புழு ஆகியவற்றின் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். பத்து லிட்டர் டேங்க் ஒன்றுக்கு, 25 மில்லி வீதம் டைமெத்தேட் மருந்தினைக் கலந்து தெளித்தால் போதும் (100 குழி நிலத்துக்கு 4 டேங்க்). முதல் பறிப்பைத் தொடர்ந்து, ஐந்து நாள் இடைவெளியில் காய் பறிக்கலாம். அதாவது, 50ம் நாள் தொடங்கி, 140ம் நாள் வரை 18 தடவை காய் பறிக்கலாம். ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ கிடைக்கும்."
இதுதான் அவர் சொன்ன பாடம்.
"மூணு மாசத்துல ஏழாயிரம் ரூபாய்!"
நிறைவாகப் பேசிய கனகராஜ், "மிதிபாகற்காய்க்கு ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவங்க கேக்குற அளவுக்கு நம்மளால உற்பத்தி பண்ணி கொடுக்க முடியறதில்ல. அதுக்குக் காரணம்... பெரும்பாலும் கோடையிலதான் இதைப் போட வேண்டியிருக்கு. அப்பத்தான் தண்ணி இல்லாம இருக்கும். தரையிலேயே இதை விதைக்க முடியும். அதேசமயம், பயிர் பண்றதுக்கும் தண்ணி இல்லாம போயிடறதால, அதிக அளவுல இதை விதைக்க முடியறதில்ல. அப்புறம், இந்தக் காயை பறிக்கறதும் கொஞ்சம் சிரமமான வேலை. அதுக்குப் பயந்துகிட்டே பல பேரு கிட்ட நெருங்க மாட்டாங்க. ஆனா, நான் இதை விடாம செய்துகிட்டிருக்கேன். அதுக்குக் காரணம்... இதுல கிடைக்கிற ஒரு லாபம்தான்!
விளைஞ்சதை, பக்கத்துல இருக்கற திருவையாறு மார்க்கெட்டு வியாபாரிக்குத்தான் கொடுக்கிறேன். ஒரு கிலோ காய் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை வெச்சி எங்ககிட்ட வாங்கிக்கிறார். சராசரி கிலோ 9 ரூபாய். கோடையில சும்மா போட்டு வைக்காம, முடிஞ்ச வரைக்கும் பாடுபட்டா... மூணு மாசத்துல... நூறு குழி நிலத்துல ஒரு ஏழாயிரம் ரூபாயைக் கையில பாக்கலாம். அதை வெச்சு நாலு நல்லது கெட்டது பாத்துக்க முடியுமே!" என்று உற்சாகத்தோடு சொன்னார்.
பாரம்பர்ய முறையிலும் பயிரிடலாமே!
பாரம்பர்ய ரகமான மிதிபாகற்காயை இவர் பயிரிடுவது ரசாயன முறை விவசாயத்தில். இதையே இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா... 'முடியும்' என்றால் எப்படி? என்பது போன்ற கேள்விகள் எழ, கோவில்பட்டி, வேளாண்மை அலுவலர் செல்வத்திடம் கேட்டோம்.
"மிதிபாகற்காயை தாராளமாக இயற்கை முறை விவசாயத்திலும் செய்யலாம். ரசாயன உரத்துக்கு மாற்றாக, எரு, மண்புழு உரம், எலும்புத்தூள், இலை மட்கு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அத்தனைச் சத்துக்களும் கிடைத்துவிடும். இலை மட்கு உரத்தைப் பயன்படுத்தினால் (பார்க்கப் பெட்டிச் செய்தி), டி.ஏ.பி. உரத்தில் இருக்கும் அத்தனைச் சத்துக்களும் நிலத்துக்குக் கிடைத்துவிடும்.
நீங்களே தயாரிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல்!
பாகல் கொடியில் காய் எடுக்க ஆரம்பித்ததுமே... கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால், வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துகள் கிடைத்துவிடும். அதோடு, ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை இடித்தும் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, நாமே வேப்பங்கொட்டையைச் சேகரித்து, இடித்துக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் வேப்பம்முத்துக்களில் இருக்கும் 23 வித சத்துகளும் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கில், வேப்பம்முத்துகளில் இருக்கும் ‘அசாடிரக்டின்’ என்ற பொருளை தனியாகப் பிரித்துவிட்டே கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சத்துக்கள் அதில் இருக்காது. சமயங்களில் புளியன் கொட்டைத் தூள் கலந்தும் விற்கப்படுகிறது.
புகையிலைக் கரைசலே போதும்!
நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், ஒரு முறை தெளிக்கப்பட்டாலே, ஐந்து வருடத்துக்கு அதனுடய நஞ்சு, நம் நிலத்திலேயே இருக்கும். எனவே, அதற்கு மாற்றாக, இயற்கையாக கிடைக்கும் வேம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டி தயார் செய்து பயன்படுத்தினாலே நல்ல பலன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது.
அசுவினி, பச்சைப் புழு, தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகள்தான் பாகற்காயைத் தாக்கும். இவற்றைத் தடுக்க, வேப்பங்கொட்டை, பூண்டு, புகையிலை கலந்த கரைசலை அடித்தாலே போதும் (பார்க்கப் பெட்டிச் செய்தி). டேங்குக்கு (பத்து லிட்டர்), புகையிலைக் கரைசல் ஒரு லிட்டர், காதி சோப் (100 கிராம்) கரைசல், ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து தெளித்தாலே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தக் கரைசலை மாலை வேளையில் தெளிப்பதுதான் நல்லது.
இதேபோல பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது நிலத்தில் பயிருக்குத் தேவையான சத்துகளும், பூச்சி, நோய் தொந்தரவும் குறைவாகவே இருக்கும்.
ரசாயனமோ... இயற்கையோ... பந்தல் இல்லாமல் பாகற்காய் விளையப்போவதில் சந்தேகமில்லை. ஆனால், நஞ்சு இல்லாமலும் விளைவிக்கவேண்டும் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்யவேண்டும்" என்று இயல்பாகச் சொல்லி முடித்தார் செல்வம்!
படங்கள் ஆர். குமரேசன், மு. நியாஸ் அகமது



                            
   

No comments: