Thursday, October 30, 2014

பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...

பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...
வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!
காசி.வேம்பையன்
பளிச்... பளிச்...
ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம்.
ஒரு சிம்புக்கு, 325 நெல்மணிகள்.
ஏக்கருக்கு 30 மூட்டை.
வீரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... பாரம்பரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... அதிக பாடும் இல்லாமல்... பண்டுதமும் பார்க்காமல்... எளிதான சாகுபடி மூலமாகவே... நிறைவான லாபத்தைப் பார்ப்பதுதான் இயற்கை வழி விவசாயச் சூத்திரத்தின் குறிக்கோள்!
இதைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகளில் ஒருவராக, இயற்கை முறையில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்து அசத்தலான வெற்றியை அறுவடை செய்து வருகிறார்... திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்.
''பரம்பரையா விவசாயம்தான் தொழில். நெல் அரவை மில், உரக்கடையெல்லாம் அப்பா வெச்சுருந்தார். நான் ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சுட்டிருந்தேன். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பத்தியும், அவர் இயற்கை விவசாயம் செஞ்சதைப் பத்தியும் ஸ்கூல்ல தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் லீவுக்கு வரும்போது, அப்பாகிட்ட சொல்லுவேன். அதையெல்லாம் கேட்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சார்.
நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு, சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். 2003-ம் வருஷம் அப்பா இறந்துட்டார். அதிலிருந்து விவசாயத்தைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்கதை சொன்ன ஆனந்த், தொடர்ந்தார் தன் விவசாய அனுபவங்களை.
இணையம் மூலம் இயற்கை!
''மில்லுக்குப் பக்கத்துலேயே இருந்த மூணு ஏக்கர் நிலத்துல, எனக்குத் தெரிஞ்சளவுக்கு இயற்கை வழி விவசாயத்தைச் செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோட பயிற்சியில கலந்துக்கற வாய்ப்பு கிடைக்கவே... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இண்டர்நெட் மூலமாவும் நிறைய தகவல்களைத் தேடிப்பிடிச்சேன். எல்லாத்தையும் சோதனை அடிப்படையில செயல்படுத்திப் பார்த்தேன். அதுல பூச்சிகளை விரட்டுறதுக்கு வசம்புக் கரைசல் நல்ல பலன் கொடுத்தது. அதைத் தெளிக்கிறப்போ பயிர்களுக்கு நோயும் வர்றதில்லை. அதனால, அதையும் பஞ்சகவ்யாவையும் மட்டும்தான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.
இப்போ, ஒன்றரை ஏக்கர்ல நெல் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கேன். மீதி நிலத்துல காய்கறி, எள், உளுந்து, கடலைனு மாத்தி மாத்தி சாகுபடி செய்றேன். ஒருபோகம் குள்ளங்கார் ரக நெல் விதைச்சா... மறுபோகம் வெள்ளைப் பொன்னி போடுவேன். இப்படி மாத்தி மாத்தி விதைப்பேன். சராசரியா, ஏக்கருக்கு 30 மூட்டை (75 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைக்குது. இதோ... சம்பா பட்டத்துல போட்ட வெள்ளைப் பொன்னி அறுவடைக்குத் தயாரா இருக்குது''
-அனுபவப் பாடத்தை முடித்த ஆனந்த், ஒன்றரை ஏக்கருக்கான வெள்ளைப் பொன்னி சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
அனைத்துப் பட்டங்களும் ஏற்றவை!
'வெள்ளைப் பொன்னி ரகத்துக்கு வயது 180 நாட்கள். அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வரும். அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய, ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு 7 கிலோ விதைநெல் தேவை. நாற்றங்காலுக்காக 2 சென்ட் நிலத்தில் களைகளை அகற்றி, இரண்டு சால் உழவு செய்து, சேறாக மாற்றி சமப்படுத்தி, ஒரு கூடை தொழுவுரத்தைத் தூவ வேண்டும். விதைநெல்லுடன், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, சணல் சாக்கில் இட்டு 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, 36 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து... நாற்றங்காலில் இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி விதைக்க வேண்டும்.
15 நாளில் நாற்று!
விதைத்த பிறகு, தண்ணீரை வடித்துவிட வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாட்கள் வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் கட்டி வைத்து வடித்துவிட வேண்டும். அதன்பிறகு, தொடர்ந்து வழக்கம்போல தண்ணீர் கட்டி வர வேண்டும். 10-ம் நாள், தண்ணீரோடு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்துவிட வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் நாற்று தயாராகி விடும்.
ஆண்டுக்கொருமுறை தொழுவுரம்!
நாற்றங்கால் தயாரிக்கும்போதே வயலையும் தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தை இட்டு, நன்கு உழவு செய்ய வேண்டும் (தொடர்ந்து இயற்கை வேளாண்மை செய்பவர்கள்... ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம் இட்டால் போதுமானது. ஒவ்வொரு போகத்துக்கும் இட வேண்டியதில்லை).
ரோட்டாவேட்டர் மூலம் நிலத்தை சேறாக்கிக் கொள்ள வேண்டும். ரெண்டு கூடை எருவில் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அரை கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, நிலத்தில் தூவ வேண்டும். பிறகு, ஓரடி இடைவெளியில், குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்று பட்டுப்போனாலும் ஒரு நாற்று பிழைத்துக் கொள்ளும்.
15 நாளுக்கொரு முறை பஞ்சகவ்யா!
நடவில் இருந்து 25 நாட்கள் வரை வேர் மறையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் நிறுத்த வேண்டும். அப்போதுதான் நன்கு வேர் பிடித்து வளரும். அதன்பிறகு, அரையடி அளவுக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 15-ம் நாள், 150 லிட்டர் தண்ணீரில் நான்கரை லிட்டர் பஞ்சகவ்யா, நான்கரை லிட்டர் வசம்புக் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வசம்பை இடித்து, 15 நாட்கள் ஊற வைத்தால் வசம்புக் கரைசல் தயார்) ஆகியவற்றைக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இதேபோலத் தெளித்து வர வேண்டும்.
நடவு செய்த 25  மற்றும் 60-ம் நாட்களில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 120-ம் நாளில் கதிர் பிடித்து, 150-ம் நாளுக்கு மேல் முற்றி, 170-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.'
54 ஆயிரம் வருமானம்!
சாகுபடிப் பாடத்தைத் தொடர்ந்து மகசூல் மற்றும் வருமானம் பற்றி சொன்ன ஆனந்த், ''இதோ பாருங்க... வெள்ளைப் பொன்னியில ஒவ்வொரு தூர்லயும் முப்பத்தஞ்சுல இருந்து நாப்பது சிம்பு வரைக்கும் இருக்குது. ஒரு சிம்புக்கு, முன்னூறுல இருந்து மூன்னூத்தியிருபத்தஞ்சு மணிகள் இருக்குது. அறுவடை செய்யுறப்போ... எப்படியும் ஒண்ணரை ஏக்கர்ல இருந்து 50 மூட்டை (75 கிலோ மூட்டை) நெல் வரைக்கும் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பார்த்தாலும் 45 மூட்டைக்குக் குறையாது.
இப்போதைக்கு மார்க்கெட் நிலவரப்படி மூட்டைக்கு 1,200 ரூபாய் கிடைக்குது. இதன்படி பார்த்தா... 45 மூட்டை நெல்லுக்கு 54 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக, எப்படியும் 33 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.

Friday, October 17, 2014

தண்ணீரில் இத்தனை வகைகளா?

மண்புழு மன்னாரு
தண்ணீரில் இத்தனை வகைகளா?
ஓவியம்: ஹரன்
மாத்தி யோசி
மாமன்னர் அக்பரும், அவரது மந்திரி பீர்பாலும் அரண்மனைத் தோட்டத்தைச் சுத்திப்பார்க்கப் போனாங்க. அப்போ, ''நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள்... விவசாயமா, வியாபாரமா, படைத்தொழிலா?''னு அக்பர் கேட்டாரு.
உடனே, ''அதிகப்படியானோர் மருத்துவர் வேலைதான் செய்கிறார்கள்''னு பதில் சொன்னாரு பீர்பால்.
இதைக்கேட்டதுமே மூக்கு மேல கோபம் வந்துடுச்சு அக்பருக்கு. ''நாட்டின் பிரதான தொழில் விவசாயம்தான். நீயோ மருத்துவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறாய். உனக்கு சித்தம் எதுவும் கலங்கிவிடவில்லையே?''னு கடுகடுத்தாரு.
''இல்லை மன்னா... நீங்கள் கேட்ட கேள்விக்கு, சரியான பதிலைத்தான் சொல்கிறேன்''னு விடாக்கண்டன் கணக்கா சொன்னாரு பீர்பால்.
''வரவர உனக்கு மூளை மழுங்கிக்கொண்டே போகிறது'னு கோபமா சொல்லிட்டு, அந்தபுரத்துக்குப் போயிட்டாரு அக்பர்.
மறுநாள் அரசவைக் கூட்டத்துக்கு, மந்திரிங்க எல்லாரும் வந்துட்டாங்க... பீர்பால் தவிர.
''பீர்பால் எங்கே?''னு கேட்டாரு அக்பர்.
''அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வரவில்லை என்று தகவல் வந்துள்ளது அரசே''னு பதில் சொன்னாங்க.
''சாதாரண காய்ச்சலுக்காகவா, அரசவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார். சுக்கு கஷாயம் போட்டு குடித்துவிட்டால், காய்ச்சல் போய்விடப் போகிறது''னு சொல்லி, பக்கத்துல இருந்த சேவகனைக் கூப்பிட்டு, ''உடனே சென்று பீர்பாலை அழைத்து வா''னு உத்தரவு போட்டாரு அக்பர்.
கொஞ்ச நேரத்துல கம்பளியை, சுருட்டிப் போத்திக்கிட்டு, நடுங்கிக்கிட்டே வந்த பீர்பாலைப் பார்த்த அக்பர், ''உனக்கு நடுங்குகிறதே. குளிர்காய்ச்சலாக இருக்கும். இதற்கு நீ சுக்குடன், கொஞ்சம் கொத்தமல்லியையும் சேர்த்து...''னு சொல்ல ஆரம்பிச்சதும், ''நூற்று நாற்பத்தேழு''னு சொன்னாரு பீர்பால்.
அக்பர், ஒண்ணும் புரியாம, ''என்னது நூற்று நாற்பத்தேழு?''னு கேட்டாரு.
''மன்னா, இன்று காலையில் காய்ச்சல் என்று நான் சொன்னதில் இருந்து, என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், தெருவில் பார்த்தவர்கள், வாயில் காப்போன், அரண்மனை சேவகன் என இதுவரை நூற்று நாற்பத்தாறு பேர் வைத்தியம் சொல்லி இருக்கிறார்கள். இப்போது அரசர் வேலையை விட்டுவிட்டு, நீங்களும் வைத்தியர் வேலை செய்ய வந்துவிட்டீர்கள். ஆக, நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள் என்பது மன்னருக்கே விளங்கியிருக்கும்''னு பீர்பால் சொன்னதும், அவரோட மதிநுட்பத்தைப் பாராட்டிப் பரிசு கொடுத்தாராம் அக்பர்.
மருத்துவர்னு தனியா ஒண்ணும் தேவையில்ல. நமக்கு நாமே மருத்துவர்ங்கிற கணக்கா, ஒவ்வொருத்தருமே உடம்பைப் பத்தி தெரிஞ்சு வெச்சுருக்கிறதுதான் நல்லது. இதைத்தான் அந்தக் காலத்துல நம்ம முன்னோருங்க செய்துக்கிட்டிருந்தாங்க. தனக்குத் தானே வைத்தியமும் பார்த்துக்கிட்டிருந்தாங்க. ஆனா, நாடு முழுக்க இருந்த இந்த மருத்துவ அறிவு, கம்ப்யூட்டர் காலத்துல கொஞ்சம், கொஞ்சமா சரிஞ்சுடுச்சுங்கிறதுதான் வேதனை. நம்மநாட்டு பாரம்பரிய மருத்துவ அறிவுபோல, வேற எந்த நாட்டுலயும் இருக்கிறதுக்கு வாய்ப்பு குறைவு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்.
தண்ணியில, எத்தனை வகை இருக்குனு கேட்டா... நல்ல நீர், உப்பு நீர்னு சொல்லுவோம். ஆனா, பல நூறு வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த தேரையர் சித்தர்... 18 வகை நீர் இருக்கிறதா சொல்லியிருக்கிறாரு. 1. மழைநீர், 2. ஆலங்கட்டிநீர், 3. பனிநீர், 4. ஆற்றுநீர், 5. குளத்துநீர், 6. ஏரிநீர், 7. சுனைநீர், 8. ஓடைநீர், 9. கிணற்றுநீர், 10. ஊற்றுநீர், 11. பாறைநீர், 12. அருவிநீர், 13. அடவிநீர், 14. வயல்நீர், 15. நண்டுக்குழிநீர், 16. உப்புநீர், 17. சமுத்திரநீர், 18. இளநீர்... இப்படியிருக்கிற இந்த நீர் ஒவ்வொண்ணுக்கும் வெவ்வேற மருத்துவத் தன்மைங்க இருக்குது.
எந்த மண்ணுல விளையுற காய்கறிகளை, எப்படி சாப்பிடணும்னு 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல்ல விளக்கமா எழுதி வெச்சிருக்காரு தேரையர் சித்தர். .
ஒவ்வொரு  தண்ணிக்கும், ஒரு குணம் உண்டு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன்... இன்னிக்கும்கூட குளூக்கோஸ் கிடைக்காத சமயத்துல, அவசர சிகிச்சைக்கு இளநீரை மனித உடம்புல ஏத்துற ஆங்கில மருத்துவருங்க உண்டு. ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை செய்யும்போதும், இளநீரை, குளூக்கோஸுக்கு பதிலா கொடுக்கிறாங்க. இந்த இளநீரை மரத்துல இருந்து கயிறு கட்டித்தான் இறக்கணும். ஏன்னா, இளநீர் 'பொத்’னு கீழ விழுந்தா கலங்கிடும். கலங்குன இளநீரை உடம்புக்குள்ள செலுத்தினா ரத்தக் குழாயில அடைச்சுடும். ஆக, ஒரு மருத்துவத்தை எப்படி செய்யணும்ங்கிற மருத்துவ அறிவு நம்மநாட்டு மக்களோட எந்த அளவுக்கு இருந்திருக்கும்ணு நினைச்சுப் பாருங்க!

Thursday, October 16, 2014

களாக்காய்...

களாக்காய்...
உயிர்வேலிக்கு உத்தரவாதம்...வருமானத்துக்கு ஆதாரம்!
'நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ''நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன்.
தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ''10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன்.
திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்!
16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், 'களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா... யாரும் உள்ள வர முடியாது'னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல. ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல மட்டும் முக்கோண முறையில நட்டு விட்டேன். எல்லா செடிகளும் நல்ல முறையில வேர் பிடிச்சு வளர்ந்திடுச்சு. 12 ஏக்கர் நிலத்துல, சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்குத் தேவைக்கு ஏத்த மாதிரி வேலியா நட்டு விட்டிருக்கேன்'' என்று சொல்லி வியப்பைக் கூட்டினார் லஷ்மிநாராயணன், தொடர்ந்தார்.
ஒரு வருடத்தில் வேலி!
''நட்ட ஒரு வருஷத்துல நல்ல வேலியா மாறிடுது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ள நுழைய முடியாது. நமக்குத் தேவையான உயரத்துக்கு வளரவிட்டு கவாத்து பண்ணிக்க லாம். கவாத்து செய்யாட்டியும் பிரச்னை இல்லை. மூணு வருஷத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு வருஷமும் மே மாசம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1,000 மீட்டர் நீளத்துக்கு வெச் சிருக்கிற செடிகள்ல இருந்து, 1,000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமா இருக்கறதால, ரோட்டுல போறவங்களும் பறிச்சுடறாங்க. எல்லாம் போக, வருஷத்துக்கு 200 கிலோ காய் கிடைக்குது. போன வருஷம் 100 கிலோ காயை, கிலோ அம்பது ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இந்த வருஷம் பழுக்க விட்டு நாத்து விட்டு, மீதி இடங்கள்ல நடலாம்னு இருக்கேன். இதுல மகசூல் கிடைக்கிறதைவிட, கம்பி வேலிக்கு பதிலா அதிக செலவில்லாத மாற்றா இருக்குறதுதான் விஷயமே!'' என்று சந்தோஷ மாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
லஷ்மிநாராயணன்,
செல்போன்: 94888-63995

காட்டுப்பழங்களில் இருந்து செடிகள்!
 களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி லஷ்மிநாராயணன் தந்த தகவல்கள், இங்கே பாடமாக-
'குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்... விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி... மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது
50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.
100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்!
மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.'
 செர்ரி தயாரிக்க, களாக்காய்!
களாக்காய் பற்றி பெரியகுளம் தோட்டகலைக் கல்லூரி, பழப்பயிர்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''களாக்காய் ஆங்கிலத்தில் 'கரோன்டா' (ளீணீக்ஷீஷீஸீபீணீ) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், 'கரிஸ்ஸா கரன்டாஸ்' (சிணீக்ஷீவீssணீ நீணீக்ஷீணீஸீபீணீs). வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான 'செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம். எங்கள் கல்லூரியை அணுகினால், தேவையின் பெயரில், நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுப்போம்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு:
தலைவர் மற்றும் பேராசிரியர்,
பழப்பயிர் துறை, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி.
தொலைபேசி: 04546-231726/233225.

Tuesday, October 07, 2014

மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !

வாழ்க மரம்... வளர்க பணம் !
மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !
 இரா.ராஜசேகரன்
நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!
ஒரு வருடத்தில் தோப்பாகும்!
மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது.
ஏக்கருக்கு 200 மரங்கள்!
சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 
வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.

 
மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.
3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்!
வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்!
60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!
ஆண்டுக்கு ஒரு லட்சம்!
ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும்.
வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.
75 லட்ச எதிர்பார்ப்பு!
 மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர்,
''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805  

இந்தியாவே தாயகம்!
மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

Saturday, October 04, 2014

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'


ஆச்சர்யம்  
செலவு இல்லை... வரவு உண்டு!
'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'
சுபாஷ் பாலேக்கர் எழுதும் தொழில்நுட்பத் தொடர்
ச்சை மணம் பரப்பும் ஜீரோ பட்ஜெட் தோட்டத்தில் சுபாஷ் பாலேக்கர் மற்றும் விவசாயிகள்...
'பசுமை விகடன்' இதழை வாசித்து வரும், நேசித்து வரும் விவசாயச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
உங்களில் நிறையபேர் என்னிடத்திலும், பசுமை விகடனின் ஆசிரியரிடத்திலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் விளைவாக 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்' தொடங்கப்பட்டிருக்கிறது. 'ஜீரோ பட்ஜெட்' என்றழைக்கப்படும் செலவில்லா இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏற்கெனவே 'பசுமை விகடன்' வாயிலாக உங்களுக்கு தெரிந்திருக்கும். பசுமைவிகடன் சார்பில் இரண்டு தடவை தமிழகத்துக்கு வந்து நேரடியாகவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். தவிர, தன்னார்வ அமைப்புகளின் ஏற்பாட்டின் பேரிலும் தமிழகம் வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளித்திருக்கிறேன். இந்தியா முழுமைக்கும் பார்த்தால்... லட்சோப லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்து... இழந்துபோன அவர்களின் வாழ்க்கை வசந்தம் மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அவர்களெல்லாம் சாதிப்பதற்கு உறுதுணையா இருக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்துக்குள் நுழையும் முன்பாக... அடிப்படையான சில விஷயங்களை அலசிவிடுவதுதான் உங்களுக்கு பல விஷயங்களில் தெளிவு பிறக்க வசதியாக இருக்கும்.
அதாவது, வசந்தம் மீண்டும் கிடைத்திருக்கிறது என்று சொன்னேன் அல்லவா...! அப்படியென்றால் ஏற்கெனவே அவர்களிடம் இருந்த வசந்தத்தைப் பறித்தது யார்..? வேறு யார்... பலரும் பெருமையாகப் பேசி வரும் 'பசுமைப் புரட்சி'தான்!
புரட்சி என்றால் என்ன பொருள்? 'புதிய கருத்தை சிருஷ்டித்தல் அல்லது படைத்தல் என்றுதானே அர்த்தம். ஆனால், இந்தப் புரட்சி சாதித்தது என்ன...?
இந்தியாவில் முன்பு வளமான நிலங்களில் ஒரு ஏக்கரில் 100 டன்கள் வரை கரும்பும், 40 குவிண்டால் வரை கோதுமையும் விளைந்ததாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அதே வளமான நிலங்கள் பசுமைப் புரட்சி வித்திட்ட ரசாயனத் திணிப்பு காரணமாக இன்று மலடாகிப்போய், 10 டன் கரும்போ, 5 குவிண்டால் கோதுமையோகூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாறிக் கிடக்கின்றன. அதேபோல ரசாயன உரத்தின் பாதிப்புகளால், மக்களின் ஆரோக்கியம் சீர்கெட்டுப் போய் பலவித கொடிய நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகியிருக்கிறார்கள். உழவர்களையும் ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்காக உலக அளவிலான மாபெரும் சதித்திட்டம்தான் இது.
தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்திக்கும், நிலங்களில் நடக்கும் உற்பத்திக்கும் வேறுபாடு உள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி என்பது மூலப்பொருளின் உருமாற்றம்தான். ஒரு பொருள் இன்னொரு பொருளாகும், அல்லது வடிவம் மாறும். ஆனால், விவசாயத்தில் அப்படிக் கிடையாது. இதில் ஒரு பொருள், பல பொருட்களாகப் பெருகும். இது விவசாயத்தில் மட்டுமே சாத்தியமான விஷயம். ஒரு எள்ளை விதைத்தால் பல மடங்கு எள் அந்தச் செடியில் கிடைக்கும். ஒரு நெல் மணியை விதைத்தால் பலமடங்கு நெல் கிடைக்கும். அதனால்தான் விவசாயத்தில் கை வைத்து சுரண்ட முயன்றார்கள். அதற்குப் பெயர்தான் பசுமைப் புரட்சி. விவசாயிகளை நவீன விவசாயத்துக்குப் பழக்கி இடுபொருட்கள் உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் நகரத்திலிருந்து வாங்கி வர வைத்து விட்டார்கள். அதாவது, மறைமுகமாக கிராமப் பொருளாதாரத்தை நகரத்துக்கு கடத்துவதுதான் முக்கிய நோக்கம் என்றுகூட சொல்லலாம்.
நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில், விவசாயிகளின் தேவைகள் அனைத்தும் அவர்களின் கிராமத்திலேயே பூர்த்தியடைந்தன. விதைகள் அனைத்தும் விவசாயிகளிடமே இருந்தன. அவர்களது சொந்தப் பசு மாட்டின் சாணத்தையும், அதன் சிறுநீரையுமே உரமாகப் பயன்படுத்தினார்கள். நாட்டுப் பசுவின் சிறுநீரையும் வேப்ப மர இலைகளையுமே பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் எந்தப் பயிருக்கும், எந்தவித இடுபொருளையும் வெளியில் வாங்கத் தேவையில்லை. அதனால், கிராமத்து மக்களின் பணம் நகரங்களுக்குச் செல்லவேயில்லை. மாறாக விளைபொருட்கள் மட்டும்தான் நகரத்துக்குச் சென்றன. கிராமத்தை நம்பிதான் நகரங்கள் இருந்தன. கிராம மக்கள் அனைவரும் அந்த காலகட்டத்தில் தற்சார்பு முறையில் பணவசதி படைத்தவர்களாகவும் ஆரோக்கியத்தோடும் இருந்தனர்.
ஒவ்வொரு கிராமமும், தங்களுக்குத் தேவையான பொருட்களை, தனது கிராமத்திலுள்ள சிறு தொழிற்கூடங்களின் மூலமாகவே உற்பத்தி செய்து கொண்டன. கடல் நீரிலிருந்து கிடைத்த உப்பைத் தவிர வேறெந்தப் பொருளும் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரவில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக ரசாயன உரம்... ஒட்டு ரக விதைகள்... அவற்றில் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள்... நோய்க்கான மருந்துகள்.... இப்படி ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து மண்ணைக் கெடுத்தன... இவைகளின் உபயத்தால் கடினமாகிப்போன மண்ணை உழுவதற்காக இயந்திரங்கள் வந்தன... இவற்றை வாங்குவதற்கு பலவித கடன் திட்டங்கள் பிறந்தன... இப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்து நவீனம் என்ற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்துப் பொருளாதாரத்தையும் சுரண்டியதன் ஒரே விளைவு, ரசாயன முறையைக் கையாண்ட விவசாயிகளில் பெரும்பாலானோர், கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்டதுதான்.
இப்படி விவசாயிகளின் தற்கொலை தொடராமல் இருக்கவும்... பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கை அழியாமல் இருக்கவும்... 'ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை (பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி)' முறைகளின் மூலம், விவசாயிகளின் வாழ்வில் வளம் செழிக்க நான் வழி காட்டிக் கொண்டிருக்கிறேன்.
எனது ஜீரோ பட்ஜெட் விவசாயம் முற்றிலும் மாறுபட்டது. இந்த முறைக்கு மாறும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான எவ்வித இடுபொருளையும் நகரத்திலிருந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. எந்தப் பயிராக இருந்தாலும், உற்பத்திச் செலவே இருக்கக் கூடாது என்பதுதான் இந்த முறையின் அடிப்படைக் கோட்பாடு.
செடிகள் வளர்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அந்தந்த செடிகளின் வேர்களின் அருகிலேயே இருக்கிறது. அதாவது... நம்முடைய நிலத்திலேயே எல்லாவித ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. ஒரு செடி, தனது வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருள்களில் 1.5% மட்டும்தான் நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 98.5% காற்று, நீர் மற்றும் ஆகாய மண்டலத்திலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது.
செடிகள் தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள ஆகாயத்திலிருந்து கரியமில வாயு மற்றும் தழைச்சத்தையும்... நீரை, பூமியிலிருந்தும், ஒளியை சூரியனிடமிருந்தும்தான் பெற்றுக் கொள்கின்றனவே தவிர, நம்மிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்வதில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. ஒரு நாளில் ஒவ்வொரு சதுர அடி இலைப் பரப்பும் 4.5 கிராம் மாவுச் சத்தைத் தயாரிக்கின்றது. இதிலிருந்து நாம் 1.5 கிராம் தானியங்களையோ அல்லது 2.25 கிராம் பழங்களையோ பெறுகிறோம். இவை அனைத்தும் இயற்கையின் துணையால் இலவசமாகவே கிடைக்கப் பெறுவது என்பதுதான் நிதர்சனம்.
-தாக்கல் செய்வோம்