Wednesday, August 13, 2014

கனமும் அதிகம்... சுவையும் அதிகம்!

கனமும் அதிகம்... சுவையும் அதிகம்!
ஆச்சர்யம்
தூரன்நம்பி
 
ஜீரோ பட்ஜெட்
கனமும் அதிகம்..... சுவையும் அதிகம்!
ஜீவாமிர்த மகத்துவம்
காவிரியின் தாய் வீடான குடகு மலையின் மடியில் மகிழ்ந்து விளையாடும் க்ரோஹள்ளி கிராமத்தில் 'ஜீரோ பட்ஜெட்' கொடி கட்டிப் பறக்கும் தோட்டத்தை கடந்த இதழுக்கு முந்தைய இதழில் பார்வையிட்டோம். அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர்... கர்நாடக மாநில விவசாய சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் லோக்கேஷ்ராஜ் அர்ஸ் (கடந்த இதழில் லோகராஜ் என்று தவறாக இடம் பெற்றுவிட்டது). தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்தி, வாழ வைத்துக்கொண்டிருக்கும் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட்டை அக்கம் பக்கம் கிராம விவசாயிகளிடம் பரப்புவதை தற்போது ஒரு தொண்டாகவே செய்துவருகிறார் லோக்கேஷ்ராஜ்.
அப்படி அவரிடம் பாடம் கற்றவர்களில் அவருடைய அக்கா மகன்களான ஹரீஸ் அர்ஸ் மற்றும் மகேஷ் அர்ஸ் ஆகியோரும் அடக்கம். இந்த விஷயத்தை நம்மிடம் சொல்லி, பிரியபட்டணம் தாலூகாவில் உள்ள தொட்டபேலா கிராமத்தில் இருக்கும் தன்னுடைய அக்காவின் தோட்டத்துக்கு நம்மை அனுப்பி வைத்தார் லோக்கேஷ்ராஜ். 

ஹரீஸ் அர்ஸ், வணிகவியல் பட்டதாரி. மகேஷ் அர்ஸ், பொறியியல் பட்டதாரி. படித்து முடித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பம், வங்கி, அரசு என்று எந்த வேலைகளுக்கும் முயற்சிக்காமல், முழுமையாக விவசாயத்தில் குதித்து விட்ட இருவரும், தற்போது கடைபிடிப்பது முழுக்க ஜீரோ பட்ஜெட்!
மதிய நேரத்து சூரியனின் சூடு கொஞ்சம் போல பதம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் தோட்டத்தில் நுழைந்தோம். குலைகுலையாக காய்த்துத் தொங்கும் தென்னந்தோப்புக்குள் குஷியாக எங்களை அழைத்துச் சென்றனர். 20 ஏக்கரில் தென்னையும், 10 ஏக்கரில் பாக்கு மரங்களும் பரந்து விரிந்து பூமிக்கு பசுமைப் பந்தல் போட்டி ருந்தன. காய்த்து, காய்ந்த நெற்றுத் தேங்காய்கள் ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கின்றன. களைகள் இஷ்டத்துக்கும் வளர்ந்து கிடக்க... வித்தியா சமான தோற்றத்திலிருக்கும் இயந்திர கத்தி கொண்டு களைகளை கத்தரித்து கொண்டு இருந்தார் ஒருவர்.
'‘இவர் ஒருவர்தான் இந்த 30 ஏக்கரையும் நிர்வகிக்கிறார்’' என்று அவரை அறிமுகம் செய்து வைத்த ஹரீஸ் அர்ஸ், தொடர்ந்தார்.
‘‘எல்லோரையும் போல நாங்களும் வழக்க மான ரசாயன உர விவசாயிகளாகத்தான் இருந்தோம். நான்கு ஆண்டுகளாகத்தான் பாலேக்கரின் தத்துவப்படி ஜீரோ பட்ஜெட் விவசாயிகளாக மாறியிருக்கிறோம். இதற்குக் காரணம் எங்களுடைய மாமா (லோக்கேஷ்ராஜ் அர்ஸ்). இந்த விவசாயத்தில் தான் வெற்றி கண்டதையடுத்து, எங்களுக்கும் அதை கற்றுக் கொடுத்ததுதான். எங்களிடம் இருபதுக்கும் அதிகமான நாட்டுப் பசு மாடுகள் இருப்பதால், ஜீவாமிர்தம் தயார் செய்வதில் எந்தச் சிரமமும் இல்லை. அதிகளவில் சாணம் கிடைப் பதால், ஜீவாமிர்தம் தயாரிக்க பீப்பாய்கள் போதவில்லை. எனவே, 10 அடிக்கு 10 அடி நீள, அகலம்... இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுத்து, அதில் பாலிதீன் பேப்பரை விரித்து தொட்டி போல உருவாக்கியுள்ளோம். அதில்தான் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். பிறகு, ஜீவாமிர்தக் கரைசலை, அந்த தொட்டிக்கு கீழ் இருக்கும் மற்றொரு தொட்டிக்கு அனுப்புகிறோம். அதில் கிணற்று நீரையும் கலந்துவிடுவோம். இந்த நீரை தனியாக ஒரு டீசல் என்ஜின் கொண்டு, தெளிப்புநீர் (ஸ்பிரிங்லர்) குழாயுடன் இணைத்துள்ளோம். அதன் மூலமாக தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு ஜீவாமிர்த பாசனம் நடக்கிறது.
ஜீரோ பட்ஜெட்டின் 4 முக்கியப் பகுதி களான பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், மூடாக்கு (Mulching) வாஸ்பா (தேவாம்சம்) என்ற நான்கையும் மனதில் நிறுத்தித்தான் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் பழைய முறைப் படியான விவசாயத்தில் விதைத்தவைதான் இந்த மரங்கள். அதனால் பீஜாமிர்தத்துக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்றாலும் ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிய பிறகு, ஜீவா மிர்தம் மட்டுமே கொடுக்கிறோம். இதுதான் பயிர்களுக்கு உயிர். அதனால் அதை நாங்கள் மிகவும் கவனமாக தயார்செய்து கொடுத்து வருகிறோம். மூன்றாவதான மூடாக்கு போடுவதுதான் எங்களுக்குப் பெரும் பிரச்னை. 30 ஏக்கருக்கு மூடாக்கு என்பது சற்று கடின மான விஷயம். மேலும் தெளிப்புநீர் முறையில் நீர் கொடுப்பதால் பூமிப் பரப்பு எங்கும் நீர் விழும். அதனால் களைகள் அதிகமாக வளர்ந்துவிடுகின்றன. இது ஒன்றுதான் பெரும் பிரச்னையாக இருந்தது.
களைகள் எங்களை கவலையில் போட்டு அமுக்கின. 3 மாதங்களுக்கு ஒரு முறை 50 ஆள், 100 ஆள் என்று ஆட்களை வைத்து களைகளை வெட்டி எடுத்தோம். ஆனால், அவ்வளவு சுலபமாக எங்கள் தோட்டத்துக்கு ஆட்கள் வந்துவிடவில்லை. காரணம், ஆள் உயரப் புதராக களைகள் வளர்ந்து கிடந்ததால் பாம்புகள் படையெடுத்து வந்து குடிபுகுந்து விட்டதுதான். அதனால், காட்டுக்குள் கால் வைக்கவே பயப்பட்டனர். 'அடடா... பாலேக்கர் சித்தாந்தத்துக்கு மாறி தவறு செய்து விட்டோமோ?' என்று கூட சிந்தனை ஓட ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நின்றோம். இந்த இக்கட்டான நிலையில்தான் டீசலில் இயங்கும் ஒரு சிறிய மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரு 4 அடி பைப், அதன் நுனியில் இரண்டு பிளேடுகள் கொண்ட கருவி ஒன்றிருக்கிறது. தெளிப்பான் (ஸ்பிரேயர்) போல அதை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரே ஆள் நாள் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் வரை களைகளை வெட்டி எடுக்கமுடியும் என்றொரு விஷயத்தைக் கேள்விப்பட்டோம். உடனடியாக அதை வாங்கி வந்து எங்கள் தோட்டத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். 
இத்தாலிய நாட்டுத் தயாரிப்பான இயந்திர களை வெட்டும் கருவியின் விலை 26 ஆயிரம் ரூபாய். இந்தக் கருவியை வாங்க, மாநில மற்றும் மத்திய அரசுகள் 50% மானியம் கொடுக்கின்றன. மீதித் தொகையை நாம் போடவேண்டும். இந்தக் கருவியை நாங்கள் மைசூரில் வாங்கினோம்'' என்று கருவி கதை சொன்ன ஹரீஸ்,
''வெட்டப்பட்ட களைகள் இப்போது மூடாக்காக மாறிவிட்டன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்ட மகிழ்ச்சியோடு விவ சாயத்தை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று நிறுத்தினார்.
தென்னையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இலைக்கருகல் நோய் காணப்பட்டதைச் சுட்டிக் காட்டி,‘‘ இலையில் இருக்கும் பச்சையத்தை பூச்சிகள் சுரண்டி இருக்கிறதே’’ என்றோம்.
இதற்கு மகேஷ் அர்ஸ் பதில் தந்தார். ‘‘அதையேன் கேட்கிறீர்கள். ஒரு கட்டத்தில் குருத்து மட்டை களைத் தவிர அனைத்து மட்டை களின் பச்சையத்தை சுரண்டி எடுக்கும் பூச்சிகளின் தாக்குதலால் மட்டைகள் கருகிவிட்டன. தோப்பையே அழித்து விடலாமா என்று கூட கலங்கிப் போனோம். மீண்டும் பாலேக்கரின் ஆலோசனைகள்தான் எங்களுக்கு கை கொடுத்தது. ‘ஜீவாமிர்தத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுங்கள்’ என்றார். எங்களிடம் இருபது பசு மாடுகள் இருப்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக மரங்களில் பசுமைத் துளிர்க்க ஆரம்பித்தது. மீண்டும் எங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மத்தளம் கொட்டியது. இந்த இரண்டு வருடங்களில் தோப்பு முழுக்க பசுமைக் கூடியதோடு, மரத்துக்கு 150 முதல் 250 காய்கள் வரை கிடைக்கின்றன. ஆக, ஜீவாமிர்தம் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது’’ என்று பெருமிதத்துடன் கூறிய மகேஷ்,
‘‘இன்னொரு அதிசயமும் இங்கே நடந்திருக்கிறது’’ என்று ஆவலைத் தூண்டிவிட்டார்.
தோட்டத்து வேலை ஆளிடம் ஒரு தேங்காயை வாங்கி உடைத்து நம்மிடம் காண்பித்தார்.
‘‘எல்லா தேங்காயிலும் இருப்பது போல இதிலும் பருப்புதானே இருக்கிறது’’ என்றோம்.
‘‘பாம் இருக்கும் என்று நினைத் தீர்களோ...?'' என்று நக்கலடித்துச் சிரித்த மகேஷ்,
''இந்தத் தேங்காய் பருப்பின் கனத்தைப் பாருங்கள். ஜீவாமிர்தம் கொடுப்பதற்கு முன்பு கிடைத்த பருப்பின் கனத்தை விட 20 முதல் 30% வரை பருப்பின் கனம் கூடி இருக்கிறது’’ என்று சொல்லி ஆச்சர் யப்படுத்தினார்.
அதன் பிறகே நாமும் அந்த அதிசயத்தை உணர்ந்து, தேங்காயை கொஞ்சம் சுவைத்தும் பார்த்தோம். கனம் மட்டுமல்ல, மிகவும் ருசி கூடிப்போனதாகவும் இருந்தது.
ஊடுபயிர்களாக மிளகு, ஏலம்... தழைச்சத்துக்கான கிளரிசீடியா செடிகள் என்று தோட்டம் முழுக்க விளைந்து கிடக்கின்றன. அவையெல்லாம் எப்படி... தோட்டத்தின் வருமானம் எப்படி?

No comments: