Saturday, October 04, 2014

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'


ஆச்சர்யம்  
செலவு இல்லை... வரவு உண்டு!
'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'
சுபாஷ் பாலேக்கர் எழுதும் தொழில்நுட்பத் தொடர்
ச்சை மணம் பரப்பும் ஜீரோ பட்ஜெட் தோட்டத்தில் சுபாஷ் பாலேக்கர் மற்றும் விவசாயிகள்...
'பசுமை விகடன்' இதழை வாசித்து வரும், நேசித்து வரும் விவசாயச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
உங்களில் நிறையபேர் என்னிடத்திலும், பசுமை விகடனின் ஆசிரியரிடத்திலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் விளைவாக 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்' தொடங்கப்பட்டிருக்கிறது. 'ஜீரோ பட்ஜெட்' என்றழைக்கப்படும் செலவில்லா இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏற்கெனவே 'பசுமை விகடன்' வாயிலாக உங்களுக்கு தெரிந்திருக்கும். பசுமைவிகடன் சார்பில் இரண்டு தடவை தமிழகத்துக்கு வந்து நேரடியாகவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். தவிர, தன்னார்வ அமைப்புகளின் ஏற்பாட்டின் பேரிலும் தமிழகம் வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளித்திருக்கிறேன். இந்தியா முழுமைக்கும் பார்த்தால்... லட்சோப லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்து... இழந்துபோன அவர்களின் வாழ்க்கை வசந்தம் மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அவர்களெல்லாம் சாதிப்பதற்கு உறுதுணையா இருக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்துக்குள் நுழையும் முன்பாக... அடிப்படையான சில விஷயங்களை அலசிவிடுவதுதான் உங்களுக்கு பல விஷயங்களில் தெளிவு பிறக்க வசதியாக இருக்கும்.
அதாவது, வசந்தம் மீண்டும் கிடைத்திருக்கிறது என்று சொன்னேன் அல்லவா...! அப்படியென்றால் ஏற்கெனவே அவர்களிடம் இருந்த வசந்தத்தைப் பறித்தது யார்..? வேறு யார்... பலரும் பெருமையாகப் பேசி வரும் 'பசுமைப் புரட்சி'தான்!
புரட்சி என்றால் என்ன பொருள்? 'புதிய கருத்தை சிருஷ்டித்தல் அல்லது படைத்தல் என்றுதானே அர்த்தம். ஆனால், இந்தப் புரட்சி சாதித்தது என்ன...?
இந்தியாவில் முன்பு வளமான நிலங்களில் ஒரு ஏக்கரில் 100 டன்கள் வரை கரும்பும், 40 குவிண்டால் வரை கோதுமையும் விளைந்ததாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அதே வளமான நிலங்கள் பசுமைப் புரட்சி வித்திட்ட ரசாயனத் திணிப்பு காரணமாக இன்று மலடாகிப்போய், 10 டன் கரும்போ, 5 குவிண்டால் கோதுமையோகூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாறிக் கிடக்கின்றன. அதேபோல ரசாயன உரத்தின் பாதிப்புகளால், மக்களின் ஆரோக்கியம் சீர்கெட்டுப் போய் பலவித கொடிய நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகியிருக்கிறார்கள். உழவர்களையும் ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்காக உலக அளவிலான மாபெரும் சதித்திட்டம்தான் இது.
தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்திக்கும், நிலங்களில் நடக்கும் உற்பத்திக்கும் வேறுபாடு உள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி என்பது மூலப்பொருளின் உருமாற்றம்தான். ஒரு பொருள் இன்னொரு பொருளாகும், அல்லது வடிவம் மாறும். ஆனால், விவசாயத்தில் அப்படிக் கிடையாது. இதில் ஒரு பொருள், பல பொருட்களாகப் பெருகும். இது விவசாயத்தில் மட்டுமே சாத்தியமான விஷயம். ஒரு எள்ளை விதைத்தால் பல மடங்கு எள் அந்தச் செடியில் கிடைக்கும். ஒரு நெல் மணியை விதைத்தால் பலமடங்கு நெல் கிடைக்கும். அதனால்தான் விவசாயத்தில் கை வைத்து சுரண்ட முயன்றார்கள். அதற்குப் பெயர்தான் பசுமைப் புரட்சி. விவசாயிகளை நவீன விவசாயத்துக்குப் பழக்கி இடுபொருட்கள் உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் நகரத்திலிருந்து வாங்கி வர வைத்து விட்டார்கள். அதாவது, மறைமுகமாக கிராமப் பொருளாதாரத்தை நகரத்துக்கு கடத்துவதுதான் முக்கிய நோக்கம் என்றுகூட சொல்லலாம்.
நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில், விவசாயிகளின் தேவைகள் அனைத்தும் அவர்களின் கிராமத்திலேயே பூர்த்தியடைந்தன. விதைகள் அனைத்தும் விவசாயிகளிடமே இருந்தன. அவர்களது சொந்தப் பசு மாட்டின் சாணத்தையும், அதன் சிறுநீரையுமே உரமாகப் பயன்படுத்தினார்கள். நாட்டுப் பசுவின் சிறுநீரையும் வேப்ப மர இலைகளையுமே பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் எந்தப் பயிருக்கும், எந்தவித இடுபொருளையும் வெளியில் வாங்கத் தேவையில்லை. அதனால், கிராமத்து மக்களின் பணம் நகரங்களுக்குச் செல்லவேயில்லை. மாறாக விளைபொருட்கள் மட்டும்தான் நகரத்துக்குச் சென்றன. கிராமத்தை நம்பிதான் நகரங்கள் இருந்தன. கிராம மக்கள் அனைவரும் அந்த காலகட்டத்தில் தற்சார்பு முறையில் பணவசதி படைத்தவர்களாகவும் ஆரோக்கியத்தோடும் இருந்தனர்.
ஒவ்வொரு கிராமமும், தங்களுக்குத் தேவையான பொருட்களை, தனது கிராமத்திலுள்ள சிறு தொழிற்கூடங்களின் மூலமாகவே உற்பத்தி செய்து கொண்டன. கடல் நீரிலிருந்து கிடைத்த உப்பைத் தவிர வேறெந்தப் பொருளும் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரவில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக ரசாயன உரம்... ஒட்டு ரக விதைகள்... அவற்றில் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள்... நோய்க்கான மருந்துகள்.... இப்படி ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து மண்ணைக் கெடுத்தன... இவைகளின் உபயத்தால் கடினமாகிப்போன மண்ணை உழுவதற்காக இயந்திரங்கள் வந்தன... இவற்றை வாங்குவதற்கு பலவித கடன் திட்டங்கள் பிறந்தன... இப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்து நவீனம் என்ற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்துப் பொருளாதாரத்தையும் சுரண்டியதன் ஒரே விளைவு, ரசாயன முறையைக் கையாண்ட விவசாயிகளில் பெரும்பாலானோர், கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்டதுதான்.
இப்படி விவசாயிகளின் தற்கொலை தொடராமல் இருக்கவும்... பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கை அழியாமல் இருக்கவும்... 'ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை (பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி)' முறைகளின் மூலம், விவசாயிகளின் வாழ்வில் வளம் செழிக்க நான் வழி காட்டிக் கொண்டிருக்கிறேன்.
எனது ஜீரோ பட்ஜெட் விவசாயம் முற்றிலும் மாறுபட்டது. இந்த முறைக்கு மாறும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான எவ்வித இடுபொருளையும் நகரத்திலிருந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. எந்தப் பயிராக இருந்தாலும், உற்பத்திச் செலவே இருக்கக் கூடாது என்பதுதான் இந்த முறையின் அடிப்படைக் கோட்பாடு.
செடிகள் வளர்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அந்தந்த செடிகளின் வேர்களின் அருகிலேயே இருக்கிறது. அதாவது... நம்முடைய நிலத்திலேயே எல்லாவித ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. ஒரு செடி, தனது வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருள்களில் 1.5% மட்டும்தான் நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 98.5% காற்று, நீர் மற்றும் ஆகாய மண்டலத்திலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது.
செடிகள் தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள ஆகாயத்திலிருந்து கரியமில வாயு மற்றும் தழைச்சத்தையும்... நீரை, பூமியிலிருந்தும், ஒளியை சூரியனிடமிருந்தும்தான் பெற்றுக் கொள்கின்றனவே தவிர, நம்மிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்வதில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. ஒரு நாளில் ஒவ்வொரு சதுர அடி இலைப் பரப்பும் 4.5 கிராம் மாவுச் சத்தைத் தயாரிக்கின்றது. இதிலிருந்து நாம் 1.5 கிராம் தானியங்களையோ அல்லது 2.25 கிராம் பழங்களையோ பெறுகிறோம். இவை அனைத்தும் இயற்கையின் துணையால் இலவசமாகவே கிடைக்கப் பெறுவது என்பதுதான் நிதர்சனம்.
-தாக்கல் செய்வோம்

No comments: