பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !
கு.ராமகிருஷ்ணம்
பளிச்... பளிச்...
பலன் தரும் பாய் நாற்றங்கால்.
ஒரு நாத்துக்கு 30 தூர்.
பூச்சிகளை விரட்டும் பூண்டு, மிளகாய்க் கரைசல்.
ஒரு நாத்துக்கு 30 தூர்.
பூச்சிகளை விரட்டும் பூண்டு, மிளகாய்க் கரைசல்.
''பாரம்பர்ய ரகமான சொர்ணமசூரி நெல் பத்தி 'பசுமை
விகடன்'ல படிச்சதுமே ரொம்ப ஆர்வமான நான், உடனடியா விதைநெல்லை வாங்கி
சாகுபடி செஞ்சேன். இன்னும் பத்து நாள்ல அறுவடை. பயிர் நல்லா செழிப்பா
இருக்குறதால நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' மகிழ்ச்சிப் பொங்க
பேசுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியைச் சேர்ந்த கண்ணன்.

''50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம்
செய்றேன். முழுக்க முழுக்க ரசாயன முறையிலதான் நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு
இருந்தேன். 'பசுமை விகடன்' படிக்க ஆரம்பிச்ச பிறகு... நம்மாழ்வாரும்,
சுபாஷ் பாலேக்கரும் சொல்ற இயற்கை இடுபொருட்களைத் தயார் செஞ்சு,
பயன்படுத்தத் தொடங்கினேன்.
இந்த
நாலு வருசமா 10 ஏக்கர்ல முழுமையா இயற்கை விவசாயமும், மீதி 40 ஏக்கர்ல 90%
இயற்கை இடுபொருட்களும் வெறும் 10% ரசாயன உரமும் கலந்து விவசாயம் செய்றேன்.
ஆனா, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை முழுமையா தவிர்த்திட்டேன். அடுத்த
வருஷத்துல இருந்து முழுக்கவும் இயற்கை விவசாயம்தான்.
கும்பகோணம் பக்கத்துல இருக்கற மருதாநல்லூரைச் சேர்ந்த
எட்வின்கிட்டதான் சொர்ணமசூரி விதைநெல் வாங்கினேன். ரெண்டு கிலோ மட்டும்
கிடைச்சதால, 30 சென்ட்ல மட்டும் ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சேன்.
இதோ, பயிரைப் பாருங்க சும்மா தளதளனு வளர்ந்து நிக்கறத...'' என்று
உற்சாகத்தோடு சொன்னவர், சொர்ணமசூரியை 30 சென்ட் நிலத்தில் தான் சாகுபடி
செய்த முறையை விவரித்தார் பாடமாக!
முளைத்த பின் விதை!
சொர்ணமசூரி ரகத்தை நாற்றங்காலில் விதைப்பதற்கு 12 மணி
நேரத்துக்கு முன்பாக தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, அடுத்த 12 மணி நேரம்
வைக்கோலும், சாக்கும் போட்டு மூடி வைக்க வேண்டும். வெப்பமும், ஈரமும்
சேர்ந்து விதையைப் பழுக்கச் செய்து, முளைப்பு விடச் செய்துவிடும்.

3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட பாலித்தீன் விரிப்பை
விரித்து, அதில் 4 அங்குலம் உயரத்துக்கு மண்ணையும், இரண்டு கிலோ மட்கிய
தொழுவுரத்தையும் கலந்து போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து, பாய்
நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். முளைவிட்ட விதைகளை, இந்த நாற்றங்காலில்
தூவி விதைக்க வேண்டும். அடுத்த நாளில் இருந்து தினமும் தண்ணீர் தெளிக்க
வேண்டும். 100 கிராம் சாணம், 100 மில்லி மாட்டுச்சிறுநீர், 200 மில்லி
தண்ணீர் கலந்து, மண்பானையில மூன்று நாள் மூடி வைத்து, 10-ம் நாளில்
நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
100 நாளில் அறுவடை!
19-ம்
நாளில் நாற்று தயாராகி விடும். சாகுபடி நிலத்தை மண்வெட்டியால் நன்றாகக்
கொத்திவிட்டு, 30 கிலோ மட்கிய தொழுவுரம் போட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அடுத்த நாள் முக்கால் அடி இடைவெளியில நாற்று நட வேண்டும். அதன் பிறகு,
காய்ச்சலும் பாய்ச்சலுமாக, நிலத்தில் உள்ள ஈரத்தைப் பொறுத்து தண்ணீர்
பாய்ச்ச வேண்டும். நடவிலிருந்து 10-ம் நாள்... 1 கிலோ சாணம், 1 லிட்டர்
மாட்டுச்சிறுநீர், 5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
15-ம் நாள் அரை லிட்டர் பஞ்சகவ்யாவை 5 லிட்டர் தண்ணீர்
கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் 50 மில்லி பூண்டு, மிளகாய்க் கரைசலை
ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் (பார்க்க, பெட்டி செய்தி).
இதையெல்லாம் சரியாகச் செய்தால், சோர்வே இல்லாமல் வேகமா வளர்வதோடு...
பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் இருக்காது. இதைத் தவிர வேறு எந்த
பராமரிப்பும் தேவையில்லை. 100-ம் நாள் அறுவடை செய்யலாம்.
சாகுபடி பாடம் முடித்த கண்ணன், 'இந்தப் பயிருக்கு 90
நாள் வயசு ஆகுது. உயரம் 3 அடி இருக்கு. ஒரு நாத்துக்கு சராசரியா 30 தூர்
வெடிச்சிருக்கு. இன்னும் 10 நாள்ல அறுவடை செய்யப் போறேன்.
இந்த 30 சென்ட்ல சராசரியா 6 மூட்டை (60 கிலோ) மகசூல்
கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அடுத்த முறை அதிக பரப்புல இதை சாகுபடி
செய்ய முடிவு செஞ்சிருக்கேன். புதுரகத்தையும், புதுப்புது நண்பர்களையும்
எனக்கு அடையாளம் காட்டின பசுமை விகடனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை''
என்று நெக்குருகிச் சொல்லி விடை கொடுத்தார்!
படங்கள்:கே. குணசீலன்
தொடர்புக்கு, கண்ணன், அலைபேசி: 94432-22257
தொடர்புக்கு, கண்ணன், அலைபேசி: 94432-22257
பூண்டு,மிளகாய்க் கரைசல் தயாரிப்பது எப்படி ?
பூண்டு, பச்சைமிளகாய் இரண்டையும் தலா ஒரு கிலோ எடுத்து,
ஒன்றாக அரைத்து, அதில் 1 கிலோ புகையிலை, 5 லிட்டர் தண்ணீர் கலந்து, மண்
பானையில் வைத்து, கொதிக்க விடவேண்டும். மூன்று நாள் மூடி வைத்து, பிறகு
நன்றாக வடிகட்டி, கசடு நீக்கிய பிறகு, இந்தக் கரைசலைப் பயிருக்குப்
பயன்படுத்தலாம்.



சமவெளிப் பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் விவசாயம் பார்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலத்தை வைத்திருப்பவர்கள்... கால்கடுக்க, உடம்பு நோக சுற்றி வந்து விவசாயம் செய்தாலும் கடைசியில் கணக்கு பார்க்கும்போது, 'லாபமே இல்லை' என்று சொல்வதைத்தான் அதிகமாகப் பார்க்கமுடியும். அதிலும் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்பவர்களின் பாடு பிரச்னைகள் மிகுந்ததாகவே இருக்கிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி ‘ஊட்டி ரோஸ்’ என்பதை முதன் முதலாக இங்கே பயிரிட்டு வெற்றி கண்டவர்தான் இந்த ராஜாராமன். அடுத்த கட்டமாகத்தான் குடை மிளகாயை கையில் எடுத்திருக் கிறார். ஊட்டி ரோஸ் மற்றும் குடைமிளகாய் இரண்டிலும் இவர் பெற்றிருக்கும் வெற்றி, சிறுமலை உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி, தற்போது பலரும் குடை மிளகாய்க்காக பசுமைக்குடில் அமைத்து வருகின்றனர்.
ரோஜா மாதிரியே இந்த குடை மிளகாய்க்கும் ஓரளவுக்கு வெப்ப நிலை இருந்தா போதும். 26 டிகிரியில் இருந்து 36 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காற்றோட ஈரப்பதம் 60% முதல் 85% வரைக்கும் இருந்தாபோதும். நல்ல செம்மண் நிலமா இருக்கணும்.
ஆயிரம் சதுர மீட்டரில் ஆறாயிரம் செடிகள் வைக்கலாம். ஒன்பது மாதத்தில் ஒரு செடியிலிருந்து ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒன்பது மாதத்தில் 30 டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக நாற்பது ரூபாய் என்றால்கூட, ஒன்பது மாதத்தில் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். பார், நாற்று, உரம், தண்ணீர், வேலையாள் சம்பளம், பேக்கிங் உள்ளிட்ட உற்பத்திச் செலவு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். அதைக் கழித்துவிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக்குடிலுக்கு தனியாக ஆறு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். இதை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
