மாறிவரும்
கலாசாரம், புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகள், வருமானத்துக்கு உகந்த
பயிர்கள் என விவசாயம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. எது விற்பனை
ஆகிறதோ, அதை மட்டுமே விளைவிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இந்த மாற்றத்தால்
நம் நாட்டின் பாரம்பரிய விதைகள், பாரம்பரிய உணவுப் பழக்கம், பாரம்பரியத்
தொழில்நுட்ப முறை என்று பல விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு பகுதியின் மண், காற்று, சூழல், வறட்சி என்று
பலவற்றையும் பொருத்து அங்கே பல ஆயிரம் ஆண்டுகளாக வளரும் பயிர்களைக்
கண்டறிந்து, காலகாலமாகப் பயரிடப்படும் ரகங்கள்தான் பாரம்பரிய ரகங்கள்.
ஆனால், இன்றைக்கு தண்ணீர் இல்லாத இடத்திலும்கூட தண்ணீர் அதிகம் தேவைப்படும்
பயிர்களைப் பயிரிடும் கொடுமையான சூழல் உருவாகிவிட்டது. இந்த மாற்றத்தில்
நாம் இழந்து கொண்டிருக்கும் பயிர்களில் ஒன்று 'பேயெள்’ எனும்
எண்ணெய்வித்துப் பயிர்.
மானாவாரி நிலப்பகுதிகளில் சிறப்பாக வளரக்கூடிய இந்தப்
பயிர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள மானாவாரி நிலங்களில்
அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்பகுதி நிலங்கள்
மாந்தோப்புகளாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறிவிட்டதால்,
சாகுபடிப் பரப்பு குறைந்து இன்று மலைசார்ந்த பகுதிகளில் மட்டுமே பயிர்
செய்யப்பட்டு வருகிறது பேயெள். தமிழகத்தின் சில பகுதிகளில் 'குச்சி எள்’
என்றும், கன்னடத்தில் 'உச்செள்’ என்றும், தெலுங்கில் 'எர்னூகலு’ என்றும்
இதை அழைக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கர்நாடக எல்லையையொட்டி உள்ள
தேன்கனிக்கோட்டை பகுதியில் ஊடுபயிராக பேயெள் பயிர் செய்யப்படுகிறது
என்பதைக் கேள்விப்பட்டு, பொங்கல் சிறப்பிதழுக்காக அதைத்தேடிப் பயணித்தோம்.
தேன்கனிகோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் என்ற ஊருக்குச் செல்லும் சாலையில்
உள்ள கிராமங்களில் வயல்கள்தோறும் கேழ்வரகு, சோளம், அவரை, துவரையோடு கலந்து
நின்று மஞ்சள்நிறப் பூக்களுடன் நம்மை வரவேற்றது பேயெள்!
பாடு இல்லாத பயிர்!

தொல்சூர்
கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஸிடம் பேசியபோது, ''எனக்கு 7 ஏக்கர்
நிலமிருக்கு. இதுல முக்கால் பகுதி மானாவாரி விவசாயம் செய்றேன். வருஷம்
தோறும் ஆரியத்த (கேழ்வரகு) தவறாம பயிர் செய்வேன். அதுல அதிகமா பயிர்
செய்யும் (மேஜர் கிராப்) பயிரைச் சுற்றி, பேயெள்ளை சால் விட்டிருவேன். இங்க
எல்லா விவசாயிகளும் இந்த வழக்கத்தைப் பின்பற்றுறாங்க. ஒரு ஆள்
உயரத்துக்குக்கூட பேயெள் செடி வளரும். நிலத்துல மஞ்சள் நிறத்துல பூத்துக்
குலுங்கறத பாக்கறதுக்கே ரொம்ப ரம்மியமா இருக்கும்.
மானாவாரிப் பட்டத்துக்கு ஆரியம், சோளம், தட்டப்பயறு,
அவரை, துவரை, பேயெள்னு 10 வகையான தானியங்கள விதைப்பு செய்வோம். இதுல
ஆரியம், சோளம், தட்டப்பயறுங்க முதல்ல அறுவடைக்கும் வரும். அப்புறம் அவரை,
துவரை வரும். கடைசியா பேயெள்ள அறுவடை செய்வோம். ஏன்னா, இது வெளைஞ்சு
வர்றதுக்கு
6 மாசமாகும். 1 ஏக்கருக்கு ஊடுபயிரா அரை கிலோ விதைகளைத்
தூவினா... 1 மூட்டை (80 கிலோ) எள் கிடைக்கும். 1 கிலோ 50 ரூபாய்னு விலை
போகுது. இதுக்குனு எந்த வேலையும் செய்யறதில்ல. அதுபாட்டுக்கு மற்ற
பயிர்களோட மழைத் தண்ணிக்கு வளந்துடும். பாடு இல்லாத ஒரு உபரி வருமானம்தான்
பேயெள்'' என்று சொன்னார்.
180 நாளில் அறுவடை!
அடுத்து, நமலேரி கிராமத்தின் ஒரு வயலில் பூத்துக்
குலுங்கிய மஞ்சள் நிறப்பூக்களைப் பார்த்து, அங்கே இறங்கி நாம் நடைபோட...
ஆர்வத்துடன் வரவேற்றுப் பேசினார், வயலுக்குச் சொந்தக்காரரான கந்தசாமி.
'பேயெள்ங்கறது பாக்குறதுக்கு சூரியகாந்திப் பூ மாதிரி
இருக்கும். சூரியகாந்தி பெரிசா இருக்கும். இது சிறியளவுல இருக்கும்.
பூவுக்குள்ளதான் விதை இருக்கும். ஆடிப்பட்டம்தான் ஏத்தது. இந்தப் பகுதியில
ஊடுபயிரா செய்ற பழக்கம்தான் உண்டு. இந்த இடம் காலியா இருந்ததால கடைசியா
பேஞ்ச மழைக்கு மொத்தமா பேயெள்ளை மட்டுமே விதைச்சிட்டேன். முன்னயெல்லாம்
சரியா ஆடிப்பட்டத்துல விதைச்சிடுவோம். பருவம் கடந்து மழை கிடைக்கிறதுனால
ரெண்டு மாசத்துக்கு முன்னதான் விதைச்சிருக்கேன்.
விதைக்கும்போது நிலத்த 2 சால் உழவு எடுத்து, 1
சென்ட்டுக்கு 100 கிராம் விதையை அரை கிலோ மணலோடு கலந்து நெருக்கமா
கைவிதைப்பு செய்யணும் (பொதுவா ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்).
முளைப்பு வந்தபிறகு ஒருமுறை களையெடுக்க வேண்டும்.
தொடர்ந்து 20 நாட்களுக்கு மழை இல்லைனாலும் தாக்குப் பிடிக்கும். 20-25
நாளுக்கு ஒரு தண்ணி கொடுத்தாகூட போதும். பொதுவா மழைக்கு மட்டுமே இதை பயிர்
வைக்கிறோம். 2 மாசம் கழிச்சி பூ எடுக்கும். களைகள மட்டும் அப்பப்ப
எடுத்துட்டு வந்தா போதும். நல்ல மழை கிடைச்சி நிலத்துல ஈரம் இருந்தா...
நிறைய கிளைகள் விட்டு, அதிக மகசூல் எடுக்க முடியும். 180 நாள்ல அறுவடைக்கு
வந்துடும். செடியோட அடிப்பகுதியை விட்டுட்டு அறுவடை செய்யணும். அதிகபட்சமா
நாலு நாள் வரைக்கும் காயவெச்சு, கையில தட்டியே எள்ளைப் பிரிச்செடுக்கலாம்''
என்று எளிமையாகத் தொழில்நுட்பங்களை நமக்குக் கடத்தினார் கந்தசாமி.
தேங்காய்த் துருவலுக்கு மாற்று!
அவரைத் தொடர்ந்து பேசிய அதே ஊரைச் சேர்ந்த புஷ்பராஜ்,
'வழக்கமா பயன்படுத்தி வரும் எள்ளைவிட, இதுல கொழுப்புச் சத்துக் குறைவு.
எள்ளு சட்னி, முள்ளங்கி சட்னினு செஞ்சு சாப்பிடும்போது இதன் முழுப் பயனும்
கிடைக்கும்.
எள்ளை வறுத்து உரல் இல்லைனா மிக்ஸியில தூளாக்கி
பூசணிக்காய் (பரங்கிக்காய்), அவரைக்கொட்டை கலந்து செஞ்ச குழம்பைச்
சாப்பிட்டா... அவ்ளோ பிரமாதமா இருக்கும். பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட
காய்கள பயன்படுத்தி செய்ற பொரியல்லயும் இந்த பேயெள் தூளைக் கலந்து
சாப்பிடலாம். தேங்காய்த் துருவலுக்கு மாற்றாவும் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த பேயெள்ளோட மணமும், சுவையும் தனிரகம். உடலுக்குத் தெம்பும்,
ஆரோக்கியமும் கிடைக்கும்'' என்று பேயெள் பெருமை பேசியவர்,
பேயெள்ளைக் காப்பாற்றுங்கள்!
'ஆரியம், துவரை, சோளம்னு நிறைய மானாவாரிப் பயிர்களுக்கு
எல்லா ஊர்லயும் ஒட்டுரகங்கள கொண்டு வந்துட்டாங்க. இந்தப் பகுதில இன்னும்
பாரம்பரிய விதைகள தான் பயன்படுத்துறோம். இந்த வியாபார உலகத்துல எல்லா
பயிர்களுக்கும் ஏதோ ஒருவித வியாபாரம் இருக்கு. பேயெள்ளுக்கும் இப்படி ஒரு
தேவை இருக்கத்தான் செய்யும். அரசாங்கம் இதை உணர்ந்து இதுக்கொரு வியாபாரத்தை
ஏற்படுத்தினா, இந்தப் பாரம் பரியமிக்க பேயெள்ளை, இன்னும் கூடுதலா பயிர்
செய்ய முடியும். அழிவில இருந்தும் காப்பாத்த முடியும்''என்று வேண்டுகோள்
வைத்தார்!
எப்படி சால் விடுவது?
நிலக்கடலை, கேழ்வரகை விதைத்துவிட்டு, ஏர்க்கலப்பையால்
நிலத்தைச் சுற்றிலும் அரை அடிக்குக் கீறிவிட வேண்டும். கீறிய இடத்தில்
விதைகளைக் கைகளால் விதைப்புச் செய்ய வேண்டும். பிறகு, பழுக்கு
(சமன்படுத்தும் கருவி) ஓட்டி, மண்ணை மூடிவிட வேண்டும்.
'வரத்து குறைஞ்சு போச்சு!’
தேன்கனிகோட்டை தானிய மண்டியில் பேயெள் விற்பனை
செய்துவரும் செல்வத்திடம் பேசியபோது, ''கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு
முன்ன சீசன்ல 100 டன் பேயெள் வந்துட்டு இருந்துச்சு. இன்னிக்கு 2 டன்தான்
வருது. டிசம்பர் மாச கடைசி தொடங்கி, பிப்ரவரி மாசம் வரைக்கும் வரத்து
இருக்கும். மைசூர், பெங்களூர் பகுதில இருந்து வர்ற வியாபாரிகள் வாங்கிட்டு
போவாங்க. மைசூர் பகுதில இதிலிருந்து கிடைக்கிற எண்ணெயை சமையல்ல
பயன்படுத்துற பழக்கம் உண்டு. கிளி, புறாக்களுக்கு தீவனமா மும்பைக்கு
இங்கிருந்து அனுப்புவாங்க. இங்கேயும் சாப்பிட வாங்கிட்டுப் போவாங்க. இப்ப
வாங்கி சாப்பிடறவங்களோட அளவும் குறைஞ்சு போச்சு. அதனால வரத்தும் குறைஞ்சு
போச்சு' என்றார் கவலையுடன்!
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பேயெள்!

பேயெள்
குறித்து தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர். தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, ''இதை
ஆங்கிலத்தில் 'நைஜர்’ (Niger ) என்று அழைப்பார்கள். பெரும்பாலும் கலப்புப்
பயிர்களாக மட்டுமே பயிர் செய்வார்கள். வறட்சியைத் தாங்கும் இயல்புடைய
பயிராக இருப்பதால், மானவாரிக்கு ஏற்ற சிறந்த ரகம். இதன் இலையிலிருந்து
வெளியாகும் ஒருவகையான வாசனையானது, நிலக்கடலையில் சுருள்பூச்சி உள்ளிட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. கேழ்வரகைத் தாக்கும்
பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் இது பாங்காற்றுகிறது. அதனால்தான் ஓசூர்,
தேன்கனிகோட்டை, கெலமங்கலம், தளி பகுதியில் கேழ்வரகு பயிரிடும்போது,
பயிரைச் சுற்றி எல்லைப் பயிராக பேயெள் விதைக்கிறார்கள்.
நல்லெண்ணெய்(எள் எண்ணெய்), விளக்கெண்ணெய்(ஆமணக்கு
எண்ணெய்) விட கூடுதல் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சாகுபடி செய்வதற்கும்
எளிமையானது. விவசாயத்தில் கூடுதல் வருமானமாகவும் இருக்கும். மக்கள், இதை
சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது குறைந்து போனதால், பயிர் செய்வதும் தற்போது
குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி
நிலையம் பையூர் 1 என்ற பேயெள் ரகத்தை வெளியிட்டுள்ளது'' என்று சொன்னார்.
பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தலைவர்
புத்தரிடம் கேட்டபோது, 'பேயெள்ளின் சிறப்பு கருதி பையூர்-1 என்ற ரகத்தை
வெளியிட்டிருக்கிறோம். கலப்புப் பயிர்களாக செய்வதற்கு ஏற்ற ரகம். இங்கு 1
கிலோ 50 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. தற்போது இருப்பு குறைவாக
இருப்பதால் விவசாயிகளுக்கு குறைந்தளவு விதைகளைக் கொடுத்து வருகிறோம். அதை
வைத்து விதைப்பெருக்கம் செய்து கொள்ளலாம். இதைத்தவிர முருங்கை, பீர்க்கன்,
புடலை உள்ளிட்ட காய்கறி விதைகளும், உயிர் உரங்களும் எங்கள் மையத்தில்
கிடைக்கும்'' என்றார்.
தொடர்புக்கு: மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம். தொலைபேசி: 04343-290600